4 ஆண்டுகளில் 211 மசோதாக்களில் 170-க்கு ஒப்புதல் – ஆளுநர் மாளிகை விளக்கம்
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் ஆளுநர் காலதாமதம் செய்கிறார் என்ற குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று ஆளுநர் மாளிகை விளக்கம் வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டதாவது:
2021 செப்டம்பர் 18 முதல் 2025 அக்டோபர் 31 வரை மொத்தம் 211 மசோதாக்கள் ஆளுநரிடம் வந்துள்ளன. அதில் 170 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன.
- இதில் 73 மசோதாக்களுக்கு ஒரு வாரத்துக்குள்,
- 61 மசோதாக்களுக்கு ஒரு மாதத்துக்குள்,
- 27 மசோதாக்களுக்கு மூன்று மாதத்துக்குள்,
- 9 மசோதாக்களுக்கு மூன்று மாதத்துக்குப் பிறகு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், 27 மசோதாக்கள் குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளன, அதில் 16 மாநில அரசின் பரிந்துரையின்படி அனுப்பப்பட்டவை.
4 மசோதாக்கள் குறிப்புகளுடன் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன, மேலும் 2 மசோதாக்களை மாநில அரசு திரும்ப பெற்றுள்ளது.
ஆளுநர் மாளிகை மேலும் தெரிவித்துள்ளது:
“மசோதாக்கள் குறித்து சமூக ஊடகங்களில் பரவிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை. ஒவ்வொரு மசோதாவும் அரசியலமைப்புச் சட்டத்தின்படி கவனத்துடன் ஆய்வு செய்யப்படுகிறது. ஆளுநர் அரசியல் விருப்பங்களை தாண்டி, மாநில மக்களின் நலனுக்காக வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுகிறார்.”
அதேபோல், UGC விதிகளுக்கு முரணான 10 மசோதாக்கள் குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக அனுப்பப்பட்டதாகவும், ஆளுநர் தமிழர் பண்பாடு, கலை மற்றும் இலக்கியத்திற்கு ஆழ்ந்த மரியாதை கொண்டவர் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.