“ஆப், ஆப் சொல்லிட்டு ஆப்பு வைத்திடாதீங்க!” — மதுரை ஆட்சியரிடம் செல்லூர் ராஜூ நகைச்சுவை
மதுரை:
மதுரை மாவட்ட ஆட்சியரிடம் எஸ்ஐஆர் தொடர்பான மனுவை வழங்கச் சென்ற அதிமுக குழுவில், முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜூ நகைச்சுவையாக கூறிய ஒரு வரி, அங்கு இருந்த அனைவரையும் சிரிக்க வைத்தது.
தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் (SIR) குறித்து மனு அளிக்க, அதிமுகவினர் மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் அவர்களை சந்தித்தனர்.
அதில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே. ராஜூ, ஆர்.பி. உதயகுமார், வி.வி. ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதிமுக சார்பில் அளிக்கப்பட்ட மனுவில்,
“பூர்த்தி செய்யப்பட்ட வாக்காளர் படிவங்களை அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி முகவர்கள் (BLA.2) மூலம் 50 வரை பெறலாம் என கூறப்பட்டுள்ளது. இது முறைகேடுகளுக்கு வழிவகுக்கும். எனவே, வீடு வீடாகச் சென்று பெறப்படும் படிவங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரடியாக பெற வேண்டும்”
என்று கோரப்பட்டது.
இந்த சந்திப்பின் போது, செல்லூர் ராஜூ நகைச்சுவையாக,
“சார், எஸ்ஐஆர் தவறில்லாம இருக்க ஆப் பயன்படுத்துறோம் சொல்றீங்க… எங்களுக்கு புரியல! ஆப், ஆப் சொல்லிட்டு கடைசில எங்களுக்கு ஆப் வைச்சிடாதீங்க!”
என்று கூறியவுடன், அங்கு இருந்த அதிமுகவினரும் அதிகாரிகளும் சிரிப்பில் ஆழ்ந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ கூறியதாவது:
“தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி முகவர்கள் 50 வரை படிவங்களைப் பெறலாம் என்று அறிவித்துள்ளது. இதில் திமுக முறைகேடுகள் செய்ய வாய்ப்புள்ளது.
திமுக ஒருபுறம் நீதிமன்றத்தில் எஸ்ஐஆருக்கு எதிராக வழக்கு தொடுத்தும், மறுபுறம் அதே விவகாரத்தில் ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்கிறது. இது இரட்டை நிலைப்பாடு.
மேலும், என் தொகுதியில் திமுகவினர் வருவாய்த் துறை அதிகாரிகளாக நடித்து, மக்களின் ஆதார் மற்றும் பேன் கார்டு நகல்களை பெற்றுச் சென்றனர். இதுகுறித்து முறையிட்டபோதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை,”
என்றார்.
இந்த சந்திப்பில் மேலூர் எம்.எல்.ஏ. பெரிய புள்ளான், அமைப்புச் செயலாளர் மகேந்திரன், இளைஞரணி செயலாளர் வழக்கறிஞர் ரமேஷ், மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தமிழரசன், எஸ்.எஸ். சரவணன், அண்ணாதுரை, மாணிக்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.