எஸ்ஐஆர் எதிர்ப்பு: நவம்பர் 11ல் தமிழகம் முழுவதும் திமுக கூட்டணியின் ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் நடைப்பெறும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு (SIR) நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, வரும் நவம்பர் 11ஆம் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகள் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளன.
திமுக கூட்டணிக் கட்சிகள் வெளியிட்ட கூட்டு அறிக்கையில் கூறப்பட்டதாவது:
நாட்டின் பெரும்பாலான அரசியல் கட்சிகள் தொடக்கம் முதலே எஸ்ஐஆருக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தேர்தல் ஆணையம் மத்திய அரசின் அழுத்தத்தில் எதேச்சாதிகாரமான முறையில் செயல்படுகிறது. சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், தமிழ்நாட்டில் எஸ்ஐஆரை அமல்படுத்துவது மக்களின் வாக்குரிமையை பறிக்கும் முயற்சியாகும்.
அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது:
- பாஜகவுக்கு எதிராக வாக்களிக்கும் சிறுபான்மை மற்றும் சாதாரண வாக்காளர்களை நீக்கி, தகுதியற்றவர்களை சேர்க்கும் நோக்குடன் எஸ்ஐஆர் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.
- இதேபோல் பிஹாரில் ஏற்பட்ட குழப்பங்களும் தீர்க்கப்படாத நிலையில், தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்களில் இந்தத் திட்டம் அமல்படுத்தப்படுவது ஜனநாயகத்திற்கு ஆபத்தாகும்.
- வடகிழக்கு பருவமழையின் உச்சத்தில் Enumeration Form நிரப்பும் பணிகள் நடைபெறுவதால், விவசாயிகள் மற்றும் கிராமப்புற மக்களுக்கு இதில் பங்கேற்க இயலாது. இதனால் அதிகமான வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படலாம்.
மேலும்,
- பல இடங்களில் BLO மற்றும் BLA2 அதிகாரிகளுக்கிடையே ஒருங்கிணைப்பு இல்லாமை, Enumeration Formகள் நேரத்திற்கு வழங்கப்படாதது போன்ற அமைப்புச் சீர்கேடுகள் வெளிப்படுகின்றன.
- தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட 2002–2005 வாக்காளர் பட்டியல்களும் முழுமையற்றதாகவும் குழப்பமூட்டுவதாகவும் உள்ளன.
இதனால், தேர்தல் ஆணையம் உடனடியாக எஸ்ஐஆர் சீராய்வை ரத்து செய்ய வேண்டும் எனக் கூட்டணிக் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. மத்திய பாஜக அரசின் கைப்பாவையாக செயல்படும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை கண்டித்து, நவம்பர் 11ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாநிலம் முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.