அரியலூரில் பாஜகவினர் கண்டன போராட்டம் — காவல்துறை தடுத்ததால் பரபரப்பு
அரியலூரில் நடைபெற்ற பாஜக கண்டன போராட்டத்தின் போது, காவல்துறையினரும் பாஜக நிர்வாகிகளும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
கோவையில் கல்லூரி மாணவி ஒருவருக்கு பாலியல் வன்முறை நடந்த சம்பவத்தை கண்டித்து, குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தும் வகையில், அரியலூர் மாவட்ட பாஜக சார்பில் இன்று (நவம்பர் 6) பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரியலூர் மாவட்ட பாஜக தலைவர் பரமேஸ்வரி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், மகளிர் அணி உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பேருந்து நிலையத்தின் ரவுண்டனாவை மறித்து பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. இதையடுத்து காவல் ஆய்வாளர் வெங்கடேஸ்வரன் அங்கு வந்து, “அருகிலேயே நீதிமன்றம் இருப்பதால், சற்று தள்ளி நின்று போராட்டம் நடத்துங்கள்” என்று அறிவுறுத்தினார்.
ஆனால் அதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பாஜகவினரின் மைக்கை அணைக்க முயன்ற காவல் ஆய்வாளர் நடவடிக்கை எடுத்ததால் பரபரப்பு நிலவியது.
பின்னர் பாஜகவினர் மைக் வழியாக பேசத் தொடர்ந்தனர். இதனால் காவல் ஆய்வாளர் ஸ்பீக்கர் பாக்ஸை எடுத்துச் சென்றார். இதையடுத்து பாஜகவினர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
பின்னர் காவல்துறையினரின் சமரச பேச்சுவார்த்தைக்கு பிறகு, ஒதுக்கப்பட்ட இடத்தில் பாஜகவினர் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.