நவம்பர் 7: ‘வந்தே மாதரம்’ பாடலின் 150வது ஆண்டு — தமிழக மக்கள் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என பாஜக வேண்டுகோள்
நாளை (நவம்பர் 7) நடைபெற உள்ள இந்தியாவின் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ பாடலின் 150வது ஆண்டு விழாவை தமிழக மக்கள் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் கேட்டுக் கொண்டுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:
“பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, ‘வந்தே மாதரம்’ பாடலின் 150வது ஆண்டு விழாவை தமிழக மக்கள் குடும்பத்துடன், குழந்தைகளுடன் சேர்ந்து ஆர்வத்துடன் கொண்டாட வேண்டும்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது தேசபக்தியை ஊட்டி வளர்த்த ‘வந்தே மாதரம்’ பாடலின் முக்கியத்துவத்தை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில், பள்ளி மற்றும் கல்லூரிகளில் விழாக்களை நடத்த தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில அரசு அனைத்து துறைகளுக்கும் உரிய வழிகாட்டுதலை வழங்கி, மக்கள் பங்கேற்பை உறுதி செய்ய வேண்டும்.”
பிரதமர் மோடி, தனது ‘மன்கி பாத்’ நிகழ்ச்சியின் 127வது பகுதியாக கடந்த அக்டோபர் 30 அன்று வழங்கிய உரையில், 1896 ஆம் ஆண்டு ரவீந்திரநாத் தாகூர் முதன்முதலாக ‘வந்தே மாதரம்’ பாடலைப் பாடிய வரலாற்றையும், அது இந்தியர்களின் மனதில் தேசப்பற்று உணர்வை ஊட்டிய விதத்தையும் நினைவுகூர்ந்தார்.
அவர் கூறியதாவது:
“‘வந்தே மாதரம்’ என்ற சொல் ஒவ்வொரு இந்தியனின் இதயத்திலும் பெருமையையும் உற்சாகத்தையும் உருவாக்குகிறது. இது தலைமுறைகளை இணைத்து, தேசத்தின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு வலுசேர்க்கும் தேசிய உணர்வின் அடையாளமாக விளங்குகிறது. துன்பம் வரும் வேளைகளில் இந்த முழக்கம் நமக்குள் உற்சாகம் மற்றும் வலிமையை உருவாக்குகிறது,” என பிரதமர் தெரிவித்தார்.
பாங்கிம் சந்திர சட்டோபாத்யாயை என்றும் நினைவுகூர வேண்டும். அவர் எழுதிய இந்தப் பாடல் இந்தியாவின் சுதந்திர உணர்வை ஊக்குவித்த ஒரு மாபெரும் படைப்பு. 19ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டாலும், இது இந்திய மரபின் ஆயிரமாண்டு சிந்தனையோடு ஆழமாக இணைந்துள்ளது.
பிரதமர் மோடி மேலும் கூறியதாவது:
“ஒவ்வொரு குடிமகனும் ‘வந்தே மாதரம்’ விழாவில் தமது பங்களிப்பைச் செய்ய வேண்டும். இது தேசத்தின் பாரம்பரியத்தையும், தேசிய உணர்வையும் உயர்த்தும் வாய்ப்பாகும்.”
தமிழக பாஜக தெரிவித்ததாவது:
பிரதமரின் அழைப்பை ஏற்று, தமிழகத்தின் நகரங்கள், கிராமங்கள் அனைத்திலும் ‘வந்தே மாதரம்’ 150வது ஆண்டு விழா தேசபக்தி திருவிழாவாகக் கொண்டாடப்பட வேண்டும். மாவட்ட அளவிலான கலை, இலக்கியப் போட்டிகள், சுதேசி பொருட்கள் கண்காட்சிகள், கருத்தரங்கங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்.
சாதி, மத, அரசியல் பேதங்களைத் தாண்டி, சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தையும் இந்திய சுதந்திரத்தின் மகிழ்ச்சியையும் நினைவுகூரும் வகையில் மாநில அரசு விழாவுக்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
அனைத்து கட்சிகளும், சமூக அமைப்புகளும், தொண்டு நிறுவனங்களும், மக்கள் நல இயக்கங்களும் ஒன்றிணைந்து ‘வந்தே மாதரம்’ விழாவில் பங்கேற்க வேண்டும்.
தமிழக பாஜகவும் மாநிலம் முழுவதும் மக்கள் பங்கேற்புடன் சிறப்பாகக் கொண்டாடும் நிகழ்ச்சிகளை நடத்த உள்ளது.
அனைவரும் நவம்பர் 7 அன்று தங்கள் வீடுகளில், அலுவலகங்களில், குடும்பத்தினருடன் ‘வந்தே மாதரம்’ பாடலைப் பாடி சமூக வலைதளங்களில் பகிர வேண்டுமென பாஜக வேண்டுகோள் விடுத்துள்ளது.
சுப்ரமணிய பாரதியார், வ.உ.சிதம்பரனார், சுப்ரமணிய சிவா, திருப்பூர் குமரன், வாஞ்சிநாதன், அஞ்சலை அம்மாள் போன்றோரின் தியாகத்தை நினைவுகூர்ந்து, அவர்களைப் போலவே தேசபக்தியை வளர்க்கும் நாளாக ‘வந்தே மாதரம்’ 150வது ஆண்டு திருநாளை நாம் அனைவரும் கொண்டாட வேண்டும்,” என அவர் தெரிவித்துள்ளார்.