ஹூக்கா பார்களுக்கான தடையை நீக்கக் கூடாது – ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ வலியுறுத்தல்
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம். ஹெச். ஜவாஹிருல்லா, தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள ஹூக்கா பார்கள் மீதான தடையை நீக்கக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:
“சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளில், பார் உரிமையாளர்கள் தாங்கள் வழங்கும் ஹூக்கா புகையிலை அல்லது நிக்கோடின் சேர்க்காத மூலிகை வகை என நிரூபிக்க முடிந்தால், அதனை வழங்க அனுமதி வழங்கலாம் என குறிப்பிட்டுள்ளது.
மேலும், மூலிகை ஹூக்கா பயன்பாட்டுக்கான நிலையான நடைமுறை (SOP) உருவாக்குமாறு மாநில அரசுக்கு வாய்மொழி உத்தரவும் வழங்கப்பட்டுள்ளது.”
ஆனால், ஜவாஹிருல்லா தனது அறிக்கையில்,
“மூலிகை ஹூக்காவில் தீங்கு விளைவிக்கும் பொருட்கள் கலக்கப்படவில்லை என்பதை உறுதி செய்வது அதிகாரிகளுக்கு சாத்தியமல்ல. ஆயிரக்கணக்கான விற்பனை நிலையங்களை கண்காணிப்பது கடினம்.
இதற்கான SOP உருவாக்குவது, தமிழகத்தில் புகையிலை தடையை பலவீனப்படுத்தும். மேலும், மூலிகை ஹூக்கா மற்றும் புகையிலை ஹூக்கா ஆகியவற்றுக்கிடையிலான வேறுபாடு ஏற்கத்தக்கதல்ல,”
என அவர் கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
“இரண்டும் புகைபிடிக்கும் பழக்கத்தை ஊக்குவித்து, நிக்கோடின் அடிமைத்தனத்திற்கு வழிவகுக்கும். எனவே, அனைத்து வகையான ஹூக்காக்களுக்கும் அமல்படுத்தப்பட்ட முழு தடையை தொடர்வதை தமிழக முதல்வர் உறுதி செய்ய வேண்டும்,” என வலியுறுத்தினார்.