திருச்சி, சேலம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் பல உள் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டதாவது:
“தமிழகத்தின் உள் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் தாக்கத்தால் இன்று மற்றும் நாளை (நவம்பர் 6, 7) மாநிலத்தின் சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மேலும், நவம்பர் 8 முதல் 11 ஆம் தேதி வரை தென் தமிழகத்தில் சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும்,” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்றைய தினம் அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.
நாளை (நவ. 7) ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை ஏற்படும் வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் பகுதியளவில் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.