மேட்டூரில் வீரப்பன் மகள் போட்டி: சேலத்தில் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தார் சீமான்
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவை தொகுதிகளில் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். இதில், மேட்டூர் தொகுதியில் புகழ்பெற்ற வனத்தலைவர் வீரப்பனின் மகள் வித்யா வீரப்பன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் மேட்டூரில் நாம் தமிழர் கட்சியின் தலைமையில் “வீரபெரும்பாட்டன் தீரனும் அவன் பேரனும்” என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு உரையாற்றினார்.
உரையாற்றிய அவர் கூறியதாவது:
“நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள் வீரப்பனை கொள்ளைக்காரன், திருடன், சந்தன மரக் கடத்தல் குற்றவாளி என்று கூறினாலும், உண்மையில் அவர் ஒரு வனக்காவலன். வீரப்பன் திருடன் என்றால் அவர் திருடிய சொத்துக்கள் எங்கே? அவருடைய மாளிகைகள் எங்கே?
நடிகனை பார்க்கச் சென்றவர்கள் உயிரிழந்தாலும், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கும் அரசு நிவாரணம் அளிக்கிறது. ஆனால் மின்னல் தாக்கி உயிரிழந்த குடும்பங்களை அரசு பார்க்க மறுக்கிறது.
வனத்தில் கால்நடைகளை மேய்ப்பதால் வனவிலங்குகளுக்கு ஆபத்து என்று கூறுபவர்கள், குவாரிகளில் வெடிகுண்டுகள் வெடித்து மலைகளை சிதைக்கும் போது அதற்கும் ஆபத்து இல்லையா?
நாங்கள் பல தேர்தல்களில் தோல்வியடைந்திருக்கிறோம். ஆனால், தேர்தலில் வெற்றி பெறுவதுதான் வெற்றி அல்ல; தோல்வியிலும் நாங்கள் சாதித்திருக்கிறோம். நான் பணம் வாங்கி சீட்டு கொடுப்பவன் அல்ல. அப்படியிருந்தால் இன்று “தீரனும் அவன் பேரனும்” என பேசும் நிலையில் நான் இருக்க மாட்டேன்,” என்றார்.
சேலம் மாவட்டத்தில் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்:
தொகுதி | வேட்பாளர் பெயர் |
---|---|
மேட்டூர் | வித்யா வீரப்பன் |
சங்ககிரி | நித்யா அருண் |
வீரபாண்டி | ராஜேஷ் குமார் |
சேலம் மேற்கு | சுரேஷ் குமார் |
கெங்கவல்லி | அபிராமி |
ஆத்தூர் | மோனிஷா |
மேலும், பிப்ரவரி 7-ம் தேதி திருச்சியில் நடைபெறும் இன எழுச்சி மாநாட்டில், தமிழகத்தின் மொத்த 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் அறிவிப்பதாக சீமான் தெரிவித்துள்ளார்.
அதோடு, தற்போதைய வேட்பாளர்களுக்கு “விவசாயி” சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு மக்களிடம் அவர் கேட்டுக்கொண்டார்.