உயர் கல்வியை மிகப்பெரும் முக்கியத்துவத்துடன் பார்க்கிறார் தமிழக முதல்வர்: அமைச்சர் கோவி. செழியன்
வரும் டிசம்பர் 20ஆம் தேதி, டிஆர்பி மூலம் 2,700 பேருக்கு நிரந்தர பேராசிரியர் நியமன உத்தரவு வழங்கப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.
கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் அவர் கலந்துகொண்டு பேசினார். கல்லூரி முதல்வர் மா. கோவிந்தராசு தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், 2022–23 மற்றும் 2023–24 கல்வியாண்டுகளில் 17 துறைகளில் பட்டம் பெற்ற 2,787 இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.
பேச்சில் அமைச்சர் கூறியதாவது:
“171 ஆண்டுகள் பழமையான இந்த கல்லூரி தஞ்சாவூர் மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க கல்வி நிறுவனமாகும். இங்கு படித்தவர்கள் பல துறைகளில் உயர்ந்த நிலையை அடைந்துள்ளனர். நான் கல்வி பயின்ற கல்லூரியில் பட்டம் வழங்குவது எனக்கு பெருமை தரும் தருணமாகும்.
இந்தக் கல்லூரியில் மாணவர்கள் அதிகம் இருந்தாலும், பட்டம் பெறுவதில் மாணவிகள் அதிகமாக இருப்பது பெருமைக்குரியது. இன்றைய விழாவில் 240 பேர் முதன்மை மாணவர்களாக பட்டம் பெறுகின்றனர்.
தமிழகம் உயர்கல்வியில் நாட்டில் முன்னணி மாநிலமாக திகழ்கிறது. தமிழக முதல்வர் உயர்கல்வியை மிகப்பெரும் முன்னுரிமையுடன் பார்ப்பவர்; அதை மேலும் உயர்த்த ஓய்வின்றி செயல்படுகிறார். பிஎச்டி பட்டம் பெறுவோரின் எண்ணிக்கையில் இந்தியாவில் முதலிடம் தக்கவைத்து வருவது தமிழகத்தின் பெருமை.
இன்று பட்டம் பெறுபவர்கள், நமது பேராசிரியர்கள் போல எதிர்காலத்தில் உயர்ந்து, மாணவர்களுக்கு பட்டம் வழங்கும் நிலைக்கு செல்ல வேண்டும். பெற்ற கல்வி குடும்பம், சமூகம் மற்றும் நாட்டின் முன்னேற்றத்திற்கு பயன்பட வேண்டும்” என்றார்.
மேலும் அவர், பத்திரிக்கையாளர்களிடம் கூறுகையில்:
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இவ்வாண்டு கல்லூரி சேர்க்கை 20% அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் 34 புதிய கல்லூரிகள் மற்றும் 7 புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. டிசம்பர் 20ஆம் தேதி 2,700 நிரந்தர பேராசிரியர் நியமன உத்தரவு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
விழாவில் கல்வி இணை இயக்குநர் அ. குணசேகரன் மற்றும் பல துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், நிர்வாகப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.