சேலம் வாழப்பாடியில் பாமக எம்எல்ஏ அருள் கார் மீது தாக்குதல் – கண்ணாடி நொறுங்கியது
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பாமக மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் பயணித்த கார் மீது அடையாளம் தெரியாத நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் காரின் கண்ணாடி உடைப்பு உள்ளிட்ட சேதம் ஏற்பட்டுள்ளது.
பாமக தலைவரான ராமதாஸின் நெருங்கிய ஆதரவாளராக விளங்கும் எம்எல்ஏ அருளுக்கும், அன்புமணி ராமதாஸ் ஆதரவாளர்களுக்கும் அண்மைக்காலமாக கருத்து மோதல் அதிகரித்து வந்தது. இதனால் கடந்த சில மாதங்களாக அருளின் தொலைபேசிக்கு கொலை மிரட்டல் மற்றும் ஆபாச அழைப்புகள் வந்ததாக அவர் காவல்துறையில் புகார் அளித்திருந்தார். தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் பாதுகாப்பு வழங்க வேண்டுமெனவும் அவர் முறையிட்டிருந்தார்.
இந்நிலையில், வாழப்பாடியில் நடைபெற்ற இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் கற்களை எறிந்து காரை தாக்கியதாக தெரிகிறது. திடீர் தாக்குதலுக்கு எதிராக எம்எல்ஏ அருளுடன் இருந்த ஆதரவாளரும் எதிர்வினை செய்ததாகக் கூறப்படுகிறது. இருதரப்பினரும் ஒருவருக்கொருவர் கற்கள் எறிந்து, உருட்டுக்கட்டைகளால் தாக்கியதால் பதட்டம் ஏற்பட்டது.
தாக்குதலில் எம்எல்ஏ அருளின் காரில் சேதம் ஏற்பட்டது. உடனடியாக அவரை ஆதரவாளர்கள் பாதுகாப்புடன் அங்கிருந்து வெளியேற்றினர். தாக்குதல் நடத்தியவர்கள் சம்பவத்துக்குப் பிறகு தப்பிச் சென்றனர்.
இந்த சம்பவத்தையடுத்து, சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எம்எல்ஏ அருள் அதிகாரப்பூர்வ புகார் அளித்துள்ளார். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.