திமுகவில் இணைந்தார் ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன் — அதிமுக மீது கடும் குற்றச்சாட்டு
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதி எம்எல்ஏவும், ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்தவருமான மனோஜ் பாண்டியன், இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
அதிமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர், மறைந்த அதிமுக முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியனின் மகனாவார்.
திமுகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
“திராவிட கொள்கையை முன்னெடுக்கும் திமுகவுடன் இணையுவதில் பெருமை கொள்கிறேன். தமிழக நலன்களை எந்த நிலையில் இருந்தும் காக்கும் தலைவர் ஸ்டாலின். ஆனால் அதிமுகவில் தொண்டர்களின் உழைப்புக்கு மதிப்பு இல்லை. எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்று சொன்னவர்; இன்று அதே கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கிறார், காரணம் என்ன என்பது தெரியவில்லை.
ஜெயலலிதா காலத்தில் அதிமுக யாருக்கும் அடகு வைக்கப்படவில்லை. ஆனால் இன்று அதிமுக பாஜகவின் கட்டுப்பாட்டில் செயல்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த காரணத்தால், இன்று மாலை 4 மணிக்கு எனது எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்கிறேன்,” என அவர் தெரிவித்தார்.