கல்லறைத் திருநாளை முன்னிட்டு தேவாலயங்களில் விசேஷ ஆராதனை: கல்லறைத் தோட்டங்களுக்கு திரண்ட கிறிஸ்தவர்கள்
கல்லறைத் திருநாளை ஒட்டி சென்னையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் நேற்று சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. அதேபோல் நகரம் முழுவதும் உள்ள கல்லறைத் தோட்டங்களில் ஏராளமான கிறிஸ்தவர்கள் குடும்பத்தோடு சென்று இறந்த உறவினர்களை நினைவுகூர்ந்து ஜெபம் செய்தனர்.
ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 2ஆம் தேதி ‘அனைத்து ஆன்மாக்கள் தினம்’ என கிறிஸ்தவர்கள் அனுசரிப்பது வழக்கம். இந்த நாள் ‘கல்லறைத் திருநாள்’ என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த நாளில் மறைந்த உறவினர்கள், பெற்றோர், சகோதர சகோதரிகள் மற்றும் நண்பர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள கல்லறைகளை குடும்பத்துடன் சென்று சுத்தம் செய்யும் பழக்கம் உள்ளது. கல்லறைகளை நன்கு அலங்கரித்து, ஜெபம் செய்யும் அவர்கள், மறைந்தவர்களுக்கு பிடித்த உணவுகளை ஏழை எளியவர்களுக்கு வழங்கியும் வருகின்றனர். கூடுதலாக கல்லறைத் தோட்டங்களில் சிறப்பு ஆராதனைகளும் நடைபெறும்.
அதன்படி, நேற்று சென்னையில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் காலை, மாலை என இரண்டு நேரங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தன. குறிப்பாக கத்தோலிக்க ஆலயங்களில் மறைந்தவர்களின் நினைவாக விசேஷ திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. பாதிரியார்கள் தேவாலயங்களுக்கு உட்பட்ட கல்லறைத் தோட்டங்களுக்கு சென்று, இறந்தோருக்காக ஜெபம் செய்து புனிதநீர் தெளித்தனர்.
சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எதிரே உள்ள பழமையான செயின்ட் மேரீஸ், செயின்ட் பேட்ரிக், கீழ்ப்பாக்கம், சாந்தோம் கியூபிள் ஐலேண்ட், காசிமேடு உள்ளிட்ட முக்கிய கல்லறைத் தோட்டங்களில் நேற்று காலை 7 மணிமுதல் மாலைய்வரை கிறிஸ்தவர்கள் பெருமளவில் திரண்டனர். தங்கள் அன்பு நெருங்கியவர்களின் கல்லறைகளை சுத்தம் செய்து, மலர் அலங்காரம் செய்து, மெழுகுவர்த்தி ஏற்றி ஜெபித்தனர். மேலும் ஏழை மக்களுக்கு உணவு மற்றும் உடைகள் வழங்கும் சேவை நிகழ்ச்சிகளும் நடத்தினர்.