சசிகலா–தினகரன் சந்திப்பு ஏன் நடக்கவில்லை? அமமுகவினருக்குள் குழப்பம்
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், சசிகலா, டி.டி.வி. தினகரன், ஓ.பி.எஸ், கே.ஏ. செங்கோட்டையன் உள்ளிட்டோர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களையும் பிரிந்தவர்களையும் மீண்டும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றே வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், அதிமுகவை மீண்டும் ஒன்றுசெய்ய வேண்டும் எனக் கூறும் சசிகலா–தினகரன் இருவரும் ஒரே திசையில் இல்லாமல் தனித்தனி பாதையில் நடக்கிறார்கள் என்பது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இதை உறுதிப்படுத்தும் வகையில், சமீபத்தில் பசும்பொன்னுக்கு அஞ்சலி செலுத்தச் சென்ற போது, சசிகலாவை சந்திக்க வாய்ப்பு இருந்தும் தினகரன் இதனைத் தவிர்த்ததாக தகவல்கள் வெளியாகின. அதே சமயம் ஓ.பி.எஸ் மற்றும் செங்கோட்டையன் இருவரும் சசிகலாவை நேரில் சந்தித்து பேசியதும் பேசுபொருளாகியுள்ளது.
பசும்பொன்னில் செய்தியாளர்களிடம் தினகரன், “சின்னம்மா எங்களுடன் வர முடியவில்லை; தாமதமாகப் புறப்பட்டதால் நேரத்திற்கு வரவில்லை. ஆனால் மனத்தால் எப்போதும் எங்களோடு இருக்கிறார். துரோகம் தோல்வியடைய வேண்டும் என்பதில் ஒரே கருத்து,” என விளக்கம் அளித்தார்.
ஆனால் மதுரை சோழவந்தானில் நேற்று நிருபர்கள் மீண்டும் “சசிகலாவை ஏன் சந்திக்கவில்லை?” எனக் கேள்வி எழுப்பியபோது, தினகரன், “சின்னம்மா என்பதைத் தாண்டி, அவர்கள் எனக்கு சித்தி. வித்தியாசத்தை புரிந்துகொள்ளுங்கள். இப்படிப் பேசாதீர்கள்,” என்று பதிலளித்தார்.
இரு தலைவர்களும் பொதுவெளியில் சந்தித்துப் பேசாமல் இருப்பது ஏன் என்ற கேள்விக்கு இன்னும் தெளிவான பதில் இல்லை. அமமுக நிர்வாகிகளின் கூற்று படி, “சசிகலா சிறையில் இருந்தபோது தினகரன் அமமுகவை தொடங்கியதில் ஆரம்பத்தில் சிறிய மனக்கசப்புகள் இருந்தன. ஆனால் அது கடந்துவிட்டது. விரைவில் இருவரும் பொதுவாக சந்திப்பார்கள்,” என கூறுகின்றனர்.