பாஜக கூட்டணிக்கு பிறகு அதிமுக சரிவில்: கார்த்தி சிதம்பரம்
பாஜகவுடன் கூட்டணி செய்து கொண்டதிலிருந்து அதிமுக தொடர்ந்து சரிவைப் பார்க்கிறது என காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
மதுரையில் நடந்த கட்சி நிகழ்ச்சி முடித்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
“தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி மீண்டும் ஒரு பொய்யான கூற்றை வெளியிட்டுள்ளார். பல மாநிலங்களில் இருந்து மக்கள் தமிழ்நாட்டில் வேலைக்காக வருகிறார்கள்; நாங்கள் அவர்களை வரவேற்கிறோம். அவர்கள் இல்லையென்றால் இங்கு பல வேலைகள் நடைபெறாது என்பதை நமக்கு நன்றாகத் தெரியும்.
தமிழ்நாட்டில் அவர்களுக்கு எந்த சிரமமும் இல்லை. அதனால்தான் உத்தரபிரதேசம், பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்காளம் போன்ற இடங்களில் இருந்து வேலைக்காக வருகிறார்கள். இங்கு அவர்களுக்கு நல்ல வாழ்வாதாரம் உள்ளது.
நாடு முழுக்க தூய்மையற்ற நகரமாக மதுரை முதலிடம் பெறுவது வருத்தம் அளிக்கிறது. ‘ஸ்வச் பாரத்’ தரவரிசையில் முதல் 50 நகரங்களில் தமிழ்நாட்டில் ஒன்றும் இல்லாததும் கவலைக்குரியது. பொது இடங்களை மதிக்கும் மனப்பான்மை மிகக் குறைவு; இதில் அரசை மட்டும் குற்றம் சொல்ல முடியாது.
வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு சரியானது. ஆனால், சரியான விசாரணை இன்றி பெயர்கள் சேர்த்தல், நீக்கம் போன்ற புகார்கள் வருகின்றன. ஒருவரின் பெயர் நீக்கப்பட்டால் அவ்வியருக்கு இதுகுறித்து அறிவிப்பு வழங்க வேண்டும். வேலைக்காக தமிழகத்திற்கு வரும் நபர்களை திடீரென வாக்காளர்களாக்குவதை எப்போதும் ஏற்க முடியாது.
செங்கோட்டையன் அதிமுகவின் எல்லா சோதனைகளையும் வெற்றிகளையும் கண்டவர். அவரை வெளியேற்றியது வருத்தமாக உள்ளது. பாஜக கூட்டணியில் சேர்ந்ததிலிருந்து அதிமுக வீழ்ச்சியடைந்து கொண்டே வருகிறது” என கார்த்தி சிதம்பரம் கூறினார்.