தோனி தாக்கல் செய்த ரூ.100 கோடி நஷ்டஈடு வழக்கை ரத்து செய்ய கோரிய ஐபிஎஸ் அதிகாரி மனு தள்ளுபடி
ஐபிஎல் சூதாட்ட விவகாரத்தில் விசாரணை நடத்திய முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார், ஒரு தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் இந்திய முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியும் சூதாட்டத்தில் தொடர்புடையவர் என குறிப்பிட்டிருந்தார்.
தனது கீர்த்திக்கு களங்கம் விளைவித்ததாகக் கூறி தோனி, 2014ஆம் ஆண்டு சம்பத் குமார் மற்றும் அந்த தனியார் தொலைக்காட்சிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் ரூ.100 கோடி நஷ்டஈடு கோரி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை நிராகரிக்க சம்பத் குமார் தாக்கல் செய்த மனுவை தனி நீதிபதி முன்பு தள்ளுபடி செய்த நிலையில், அவர் அதற்கு மேல்முறையீடு செய்தார்.
இந்த மேல்முறையீட்டை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் எம்.ஜோதிராமன் அமர்வு, தோனி தாக்கல் செய்த வழக்கை ரத்து செய்ய கோரிய சம்பத் குமார் மனுவை ஏற்க முடியாது எனத் தெளிவுபடுத்தி தள்ளுபடி செய்துள்ளது.