செங்கோட்டையனின் பதவியை ஜெயலலிதா ஏன் நீக்கினார்? — திண்டுக்கல் சீனிவாசன் விளக்கம்
சசிகலா, டி.டி.வி. தினகரன், ஓ.பன்னீர் செல்வம் மற்றும் செங்கோட்டையனை மீண்டும் அதிமுகவில் சேர்க்க வேண்டிய அவசியமில்லை என கட்சியின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
“ஜெயலலிதா தானே தினகரனை கட்சியில் இருந்து நீக்கியவர். அவர் அதிமுக குறித்து சொல்வதற்கெல்லாம் நாங்கள் பதில் அளிக்க வேண்டிய நிலை இல்லை. செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியை விட வயதில் மூத்தவர் என்பது ஒரே தகுதி; மற்ற அனைத்துத் திறமைகளும் பழனிசாமிக்கே உள்ளன. முதல்வர் பதவி வந்தபோது இரண்டு முறை வாய்ப்பு விட்டதாகச் சொல்கிறார். வாய்ப்பு வந்தால் யாருமே அப்படிச் செய்ய மாட்டார்கள். முதல்வர் பதவி எனில் அதை கைவிடத் தயாராக இருப்பது போல் இல்லை.”
“2026-ஆம் ஆண்டு பழனிசாமி முதல்வராக வருவது தேவையின் முடிவு. ஜெயலலிதா இருந்த காலத்தில் முதல்வராக வர வேண்டும் என செங்கோட்டையன் விருப்பம் வைத்ததை, கட்சி நிர்வாகிகள் ஆதாரங்களுடன் தெரிவித்ததால் அவர் அமைச்சர் பதவி நீக்கப்பட்டார். சசிகலா, ஓபிஎஸ், தினகரன் ஆகியோர் கட்சிச் சட்டப்படி நீக்கப்பட்டவர்கள்; எனவே அவர்களை மீண்டும் சேர்க்க வேண்டிய அவசியமே இல்லை.”
“பழனிசாமியிடம் 75 எம்எல்ஏக்கள் உள்ளனர். சசிகலா, தினகரன் ஆகியோருடன் ஒரே ஒரு எம்எல்ஏ கூட இல்லை. எம்ஜிஆர் தொடங்கிய 1972-ம் ஆண்டிலிருந்து நாங்களே இந்த இயக்கத்தில் இருக்கிறோம். இந்த நால்வரையும் மீண்டும் சேர்க்கக் கூடாது என்றே நாங்கள் உறுதியாகக் கூறுகிறோம்.”
மேலும் அவர் கூறியதாவது:
“திமுகவின் பி-டீம் யார் என்பதை பழனிசாமி தெளிவாகச் சொல்லி உள்ளார். பசும்பொன்னில் பழனிசாமியுடன் வர வேண்டிய செங்கோட்டையன், வேறு தரப்புடன் சென்றதால் குழப்பம் ஏற்பட்டது. அப்போது என்னை நீக்கினால் சந்தோஷம் எனச் சொன்னவர், இன்று நான் வழக்கு தொடருவேன் என்கிறார். சசிகலா, ஓ.பன்னீர் செல்வம், தினகரன் ஆகியோரின் நிலைமை போலவே, அவர்களுடன் சென்ற செங்கோட்டையனின் நிலையும் அதேபோல ஆகும்.”