“கட்சியின் மாநாட்டுக்குப் பிறகே தேர்தல் முடிவு” — கிருஷ்ணசாமி
புதிய தமிழகம் கட்சியின் 7வது மாநில மாநாட்டுக்குப் பிறகே வரவிருக்கும் தேர்தலில் தங்களின் நிலைப்பாட்டை அறிவிப்பதாக கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“புதிய தமிழகம் கட்சியின் மாநில மாநாடு ஜனவரி 7 அன்று மதுரையில் நடைபெறுகிறது. கடந்த நான்கு மாதங்களாக இந்த மாநாட்டை விளக்கும் பயணமாகவும், மேலும் கிராம மக்களின் பிரச்சினைகளை அறிந்துகொள்ளவும் மாநிலம் முழுவதும் பயணம் மேற்கொண்டேன்.
திருநெல்வேலி, திண்டுக்கல் மாவட்டங்களில் குறிப்பாக தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் குடிநீர், சாக்கடை, பாசன வசதி போன்ற அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படாமல் இருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இது திட்டமிட்ட புறக்கணிப்பு, மனித உரிமை மீறல்,” என்று கூறினார்.
இதை எதிர்த்து நவம்பர் 20-ம் தேதி நெல்லையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிக்கு ஆதரவு தெரிவித்த அவர்,
“அதே நேரத்தில் செயல்முறை வெளிப்படையானதாக இருக்க வேண்டும். நகராட்சி மற்றும் குடிநீர் துறையில் நடந்ததாக கூறப்படும் 2,538 பணியிட தேர்வில் ஏற்பட்ட முறைகேடுகள் குறித்து விசாரணை வேண்டும். அந்த பட்டியல் ரத்து செய்யப்பட வேண்டும்; அமைச்சர் கே.என்.நேரு பொறுப்பு ஏற்று விலக வேண்டும்,” என்றார்.
அதிமுக உள்கட்சி நிலைமை குறித்து கருத்துப்பரிமாறிய அவர்,
“எங்கள் கட்சியின் மாநாட்டுக்குப் பிறகு தேர்தல் கூட்டணிக் குறித்த எங்கள் நிலைப்பாடு அறிவிக்கப்படும். நிச்சயமாக கூட்டணியில் பங்கேற்போம்,” என்று தெரிவித்தார்.