தமிழக உரிமைகள் காக்க ஒன்றுபடும் நாள் — முதல்வர், தலைவர்கள் உறுதிமொழி
மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்ட நவம்பர் 1-ம் தேதியை முன்னிட்டு, தமிழ்நாடு நாள் மற்றும் எல்லை போராட்ட தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் வாழ்த்துச் செய்தி வெளியிட்டு, தமிழகம் எதிர்கொள்ளும் உரிமைப் போராட்டங்களில் தளராது நிற்போம் என உறுதியெடுத்தனர்.
ஆளுநர் ஆர். என். ரவி
“பழமையான ஆன்மீகம், கலாச்சாரம், இலக்கியச் செழிப்பைக் கொண்டு விளங்கும் தமிழ்நாடு உருவான நாளில் மக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள், தொழில்முனைவோர் என அனைத்து துறையினரும் இணைந்து செயல்படுவதால் தமிழகத்தின் வளர்ச்சி தொடர்கிறது. மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக நாம் ஒவ்வொருவரும் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும்.”
முதல்வர் மு.க. ஸ்டாலின்
“தமிழக எல்லைக்காக உயிர்நீத்த மார்ஷல் நேசமணி, ம.பொ.சி மற்றும் பல தியாகிகளை நினைவுகூர்கிறேன். போராடாதால் நிலத்தை மட்டுமல்ல, அடிப்படை வாக்குரிமையையும் இழக்க நேரிடும் என வரலாறு எச்சரிக்கிறது. எனவே தமிழகத்தின் உரிமை, மொழி, அடையாளம் காக்க தொடர்ந்து போராடுவோம். தமிழகம் எழும், தமிழகம் சாதிக்கும்.”
பாமக நிறுவனர் ராமதாஸ்
“தமிழ்நாடு நாள் ஒரு பெருவிழா. இழந்த உரிமைகளை மீட்கவும், உலகத் தமிழர்கள் அனைவரும் இன்று உறுதி எடுத்துக்கொள்ள வேண்டிய நாள் இது.”
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
“தமிழர்களின் மொழி, இனம், பண்பாடு ஆகியவற்றை காக்கவும் அரசியல் உரிமைகளை நிலைநாட்டவும் தொடர்ந்து உறுதிப்பட செயல்படுவோம்.”
தவெக தலைவர் விஜய்
“தமிழ்நாடு எனப் பெயர் பெற தியாகம் செய்த முன்னோர்களை நினைவுகூர்கிறோம். மக்கள் விரோத திமுக ஆட்சியிலிருந்து மாநிலத்தை மீட்போம். தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துக்கள்.”
அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன்
“சாதி-மத பேதங்கள் இன்றி, தமிழர் அடையாளத்தை உயர்த்தி, அனைத்து துறைகளிலும் முன்னேற்றமான மாநிலமாக தமிழகத்தை மாற்ற உறுதியெடுக்கிறோம்.”
நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்
“மூவேந்தர் கொடிகளுடன் எல்லைப் போராட்ட வீரர்களுக்கு வணக்கம் செலுத்தி, தமிழ்நாடு நாளை உற்சவமாகக் கொண்டாடுவோம்.”