சென்னையில் ஃபோர்டு மீண்டும்! – 600 பேருக்கு வேலைவாய்ப்பு, முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
ஃபோர்டு நிறுவனம் மீண்டும் சென்னைக்கு திரும்பி வருகிறது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். ரூ.3,250 கோடி முதலீட்டுடன் அடுத்த தலைமுறை வாகன இன்ஜின் (Next-Gen Engine) உற்பத்தி ஆலை மறைமலைநகர் தொழிற்சாலையில் அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டம் மூலம் 600 பேருக்கு நேரடி வேலை வாய்ப்பு கிடைக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
சமூக வலைதளத்தில் இதுகுறித்து பதிவிட்ட முதல்வர் ஸ்டாலின், “முழு ஆற்றலுடன் ஃபோர்டு மீண்டும் திரும்புகிறது. நீண்டகால நம்பிக்கை உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த முதலீடு அமைகிறது. இதன் மூலம் தமிழ்நாட்டின் வாகன உதிரிப்பாகத் துறை மேலும் வளர்ச்சி பெறும்” என்று கூறினார்.
அதேபோல், அடுத்த தலைமுறை இன்ஜின் உற்பத்திக்காக இந்தியாவின் ஆட்டோமொபைல் தலைநகரான தமிழ்நாட்டைத் தேர்வு செய்துள்ள ஃபோர்டின் முடிவு, மாநிலத்தின் தொழில்துறை திறன் மற்றும் உலக உற்பத்திச் சங்கிலியில் அதன் முக்கியத்துவத்தை நிரூபிக்கிறது என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.