இலங்கையில் நாட்டுடமையாக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள் சேதப்படுத்தப்படும் அவலம்
இலங்கை அதிகாரிகள் கைப்பற்றி நாட்டுடமையாக்கிய தமிழக மீனவர்களின் படகுகளை உடைக்கும் பணிகள் தொடங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஒரு தசாப்தத்தில், இலங்கை கடற்படை சுமார் 500க்கும் அருகே தமிழக மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்துள்ளது. மேலும் 3,500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்திய அரசின் முயற்சிகளால் மீனவர்கள் விடுவிக்கப்பட்டாலும், அவர்களின் படகுகள் பெரும்பாலும் திருப்பி வழங்கப்படவில்லை.
2018 பிப்ரவரி மாதத்திலிருந்து, இலங்கை நீதிமன்றங்கள் தமிழகமும் புதுச்சேரியும் சேர்ந்த சுமார் 200 படகுகளை அதிகாரப்பூர்வமாக நாட்டுடமையாக்கி உள்ளன. இவை தலைமன்னார், காங்கேசன்துறை, மயிலிட்டி போன்ற துறைமுகங்களில் நீண்டகாலமாக நிறுத்தப்பட்டுள்ளன.
மயிலிட்டி துறைமுகத்தில் மட்டும் 125 படகுகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதில் 40 படகுகள் தொடர்பான வழக்குகள் இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. நீதிமன்ற உத்தரவின் பேரில் ராமேசுவரம் மீனவர்கள் 7 படகுகளை மீட்கவுள்ளனர். மீதமுள்ள 78 அரசுடமையாக்கப்பட்ட படகுகள் துறைமுகத்தில் அப்படியே வைக்கப்பட்டுள்ளன.
இந்த படகுகள் நீண்டகாலமாக துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ளதால், கடற்கரை மாசுபடுவதோடு, அங்குள்ள இலங்கை மீனவர்களின் படகு நுழைவு மற்றும் தொழில் பாதிக்கப்படும் என்று புகார்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து வழக்குகள் விசாரிக்கப்பட்டு, சேதமடைந்த படகுகளை அழிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இதன் அடிப்படையில், தற்போது மயிலிட்டி துறைமுகத்தில் நிற்கும் தமிழக மீனவர்களின் படகுகள் ஜேசிபி இயந்திரங்களால் இடிக்கப்பட்டு மரத்துண்டுகளாக மாற்றப்படுகின்றன.
முன்னதாக இழப்பீடாக, இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்த விசைப்படகுகளுக்கு ரூ.8 லட்சமும், நாட்டுப்படகுகளுக்கு ரூ.2 லட்சமும் தமிழக முதல்வரின் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்டிருந்தது.