கரூர் நெரிசல் விபத்து: உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தவெக சார்பில் தலா ரூ.20 லட்சம் வழங்கல்
கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, தவெக சார்பில் தலா ரூ.20 லட்சம் நிவாரணத் தொகை சனிக்கிழமை வழங்கப்பட்டது.
கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர்; மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த, உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. குழுவினர் பல்வேறு தரப்பினரிடம் விசாரணை மேற்கொண்டதுடன், தவெக நிர்வாகிகள் இருவரை காவலில் எடுத்து விசாரித்தனர்.
பின்னர், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. ஐபிஎஸ் அதிகாரி பிரவீண்குமார் தலைமையிலான சிபிஐ குழுவினர் அக்டோபர் 16-ஆம் தேதி கரூரில் விசாரணையை தொடங்கினர்.
இந்நிலையில், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தமிழக அரசு தலா ரூ.10 லட்சம், காங்கிரஸ் ரூ.2.5 லட்சம், மநீம ரூ.1 லட்சம், விசிக ரூ.50 ஆயிரம் என பல்வேறு அரசியல் கட்சிகள் நிவாரணம் வழங்கியிருந்தன. தவெக சார்பில் தலா ரூ.20 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
விஜய் நேரில் வந்து நிவாரணம் வழங்குவார் என எதிர்பார்க்கப்பட்டாலும், இடத் தேர்வு சிக்கலால் அவர் வருகை தாமதமானது. இதற்கிடையில், 27 குடும்பங்களைச் சேர்ந்த 31 உயிரிழந்தோரில், 27 பேரின் வங்கிக் கணக்குகளில் சனிக்கிழமை தலா ரூ.20 லட்சம் வரவு வைக்கப்பட்டது. அதற்கான குறுஞ்செய்தி குடும்பத்தினருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மேலும், உயிரிழந்த 10 பேரின் குடும்பங்களுக்கும் இதேபோல் நிவாரணம் வழங்கப்பட்டதாகவும், ஒரே குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்டோர் உயிரிழந்திருந்தாலும், அந்தக் குடும்பத்துக்கு மொத்தம் ரூ.20 லட்சம் மட்டுமே வழங்கப்பட்டதாகவும் தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலுசாமிபுரம் பகுதியைச் சேர்ந்த செல்வராணி என்ற பெண், “தவெகவினர் முன்பு வங்கிக் கணக்கு விவரங்களை பெற்றிருந்தனர். இன்று வங்கியில் ரூ.20 லட்சம் வரவு வைக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது,” என்று தெரிவித்தார்.