கனமழை தாக்கம்: குற்றாலம் அருவிகளில் மூன்றாவது நாளாக வெள்ளப் பெருக்கு தொடர்கிறது
திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக குற்றாலம் அருவிகளில் மூன்றாவது நாளாகவும் வெள்ளப் பெருக்கு நீடித்தது.
திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் (இன்று காலை 8 மணி வரை) அதிகபட்சமாக நாலுமுக்கு பகுதியில் 101 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மாஞ்சோலை, ஊத்து பகுதிகளில் தலா 80 மில்லி மீட்டர், காக்காச்சியில் 90 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணையில் நீர்மட்டம் 88.10 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 1,613 கனஅடி தண்ணீர் வருகை இருந்தது; இதில் 200 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. 118 அடி உச்சநீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணையில் நீர்மட்டம் 93.90 அடியாக இருந்தது; அணைக்கு விநாடிக்கு 712 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. தற்போதைக்கு அணையின் கதவுகள் மூடப்பட்டுள்ளன.
தொடர் மழையால் திருநெல்வேலியில் பல இடங்களில் பாதிப்புகள் ஏற்பட்டன. மேலப்பாளையம் அருகே குறிச்சி மருதுபாண்டியர் தெருவில் முத்தையா என்பவரது வீட்டுச் சுவர் இடிந்து விழுந்தது. இதில் சிக்கி அவரது தாயார் மாடத்தியம்மாள் (வயது 75) கடுமையாக காயமடைந்து, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்தார். இதுகுறித்து மேலப்பாளையம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்காசி மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக மழை தீவிரமடைந்துள்ளது. நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் சராசரியாக 99 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கி நெற்பயிர்கள் முழுகியுள்ளன.
இதன் விளைவாக, குற்றாலம் பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப் பெருக்கு தொடர்கிறது. இதனால் பொதுமக்கள் குளிக்க விதிக்கப்பட்ட தடை இன்றும் அமலில் உள்ளது. எனினும், தீபாவளி விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு வந்த சுற்றுலா பயணிகள் பலர் அருவிகளுக்கு வந்து வெள்ளப் பெருக்கைக் கண்டு ரசித்தனர்.