மேகதாது தீர்மானத்தில் உதயநிதியின் கோரிக்கை சேர்ப்பு: சட்டமன்ற விதிகளுக்கு முரணானது என இபிஎஸ் கடும் எதிர்ப்பு!
சென்னை:
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மேகதாது தனித்தீர்மானத்தில், திமுக உறுப்பினர் உதயநிதியின் கோரிக்கையை இடைச்செருகலாகச் சேர்த்ததற்கு அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார். மேகதாது அணை விவகாரம் தொடர்பாக நடுவர் மன்றம் அமைக்கப்பட வேண்டும் என்று உதயநிதி முன்வைத்த கோரிக்கையைத் தனித்தீர்மானத்தில் இணைப்பதாக முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்திருந்தார். அரசின் இந்தத் திடீர் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிசாமி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) தளத்தில் காரசாரமான பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
சட்டமன்ற விதிகளுக்கு முரணானது – இபிஎஸ் சாடல்:
தனது எக்ஸ் பதிவில் எடப்பாடி பழனிசாமி, “திருத்தங்களுடன் கூடிய ஒரு தீர்மானம் முறைப்படி அவையில் முன்மொழியப்படாமலும், அதற்குரிய வாக்கெடுப்பிற்கு விடப்படாமலும் அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்டது சட்டமன்ற விதிகளுக்கு முற்றிலும் முரணான செயலாகும்” என்று சாடியுள்ளார். அவையில் கொண்டு வரப்பட்ட அசல் அரசினர் தனித் தீர்மானத்தை மட்டுமே அதிமுக ஆதரித்ததே தவிர, முதலமைச்சர் ஜோசப் விஜய் இறுதியாகத் தன் உரையில் சேர்த்துக் கொண்ட இடைச்செருகல் தீர்மானத்தை அதிமுக எவ்விதத்திலும் ஆதரிக்கவில்லை என்று அவர் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தியுள்ளார்.
யாரை மகிழ்விக்க இந்தத் தீர்மானம்?
அரசின் இந்த அரசியல் நகர்வை விமரிசித்துள்ள இபிஎஸ், “கடைசி நேரத்தில் திருத்தி அமைக்கப்பட்ட இந்தத் தீர்மானம், எவ்விதத்திலும் உண்மையான அரசினர் தனித் தீர்மானம் ஆகாது” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், “இப்படி விதிகளுக்குப் புறம்பாகக் கொண்டு வரப்பட்ட தீர்மானம் யாரை மகிழ்விக்க?.. யாரை வஞ்சிக்க?..” என்று தவெக அரசை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ள எடப்பாடி பழனிசாமியின் இந்த அதிரடிப் பதிவு, தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்பொழுது பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.






