அரசுப் பள்ளியில் விஜய் படம் மாட்டி ரீல்ஸ்: தவெகவினருக்கு அண்ணாமலை கடும் கண்டனம்!
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே உள்ள அரசுப் பள்ளி ஒன்றில், தமிழக வெற்றிக் கழகத்தைச் (தவெக) சேர்ந்த 20க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திடீரென நுழைந்துள்ளனர். அவர்கள் அங்கிருந்த வகுப்பறை சுவரில் தமிழக முதலமைச்சர் விஜய்யின் புகைப்படத்தை மாட்டியதோடு, அதனை வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் ‘ரீல்ஸ்’ ஆக வெளியிட்டுள்ளனர். தவெகவினரின் இந்தச் செயலுக்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், பாஜக மூத்த தலைவர் அண்ணாமலை இதற்குத் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
பள்ளிக் கல்வித் துறையின் அவலம்
இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில் அரசுப் பள்ளிகள் போதிய கட்டிட வசதிகள் கூட இல்லாமல் மிகவும் தரமிழந்து போயுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார். தற்போதைய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன், அரசுப் பள்ளிகளின் இழந்த பெருமையை மீட்டெடுக்கும் மிகப்பெரிய பணி தன் முன்னால் இருப்பதாகக் கூறி வரும் நிலையில், தவெக கட்சியினரின் இதுபோன்ற பொறுப்பற்ற செயல்பாடுகள் அரசுப் பள்ளிகளின் நிலையை மேலும் அவலப்படுத்தும் விதமாகவே அமைந்திருக்கின்றன என்று அவர் சாடியுள்ளார்.
முதலமைச்சர் கவனத்திற்கு…
மேலும், தவெகவினர் ஆளுங்கட்சியாக இருக்கிறார்கள் என்பதற்காக, அரசுப் பள்ளிகளுக்குள் அத்துமீறி நுழைந்து மாணவர்களின் வகுப்புகளைத் தொந்தரவு செய்வதை முதலமைச்சர் விஜய் அவர்கள் நிச்சயம் ஏற்றுக்கொள்ள மாட்டார் என்று தாம் நம்புவதாக அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். எனவே, இனிவரும் காலங்களில் இது போன்ற அத்துமீறல்கள் மீண்டும் நடைபெறாதவாறு, தங்கள் கட்சியினருக்கு உரிய அறிவுரைகளை வழங்குமாறு முதலமைச்சர் விஜய்யையும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகனையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.






