“தவெகவில் இணைந்தால் முழு மனதுடன் வரவேற்போம்” – முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள் அதிரடித் தீர்மானம்!
புதுக்கோட்டை:
அதிமுகவில் இருந்து விலகி தனது விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ பதவியையும் சி. விஜயபாஸ்கர் ராஜினாமா செய்துள்ள சூழலில், புதுக்கோட்டையில் அவரது ஆதரவாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்ற அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சி.விஜயபாஸ்கர் தங்களின் அடுத்தகட்ட அரசியல் நகர்வாகத் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்தால், அதனைத் தங்களின் முழு மனதுடன் ஏற்றுக்கொண்டு வரவேற்பது என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. இதனால் அவர் மிக விரைவில் முதல்வர் ஜோசப் விஜய் முன்னிலையில் தவெகவில் இணையலாம் என்ற எதிர்பார்ப்பு வலுத்துள்ளது.
ஆர்.பி.உதயகுமாருக்குக் கடும் கண்டனம்:
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள், சமீபத்தில் சி.விஜயபாஸ்கர் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்குத் தங்களது கண்டனங்களைத் பதிவு செய்தனர். அப்போது பேசிய அவர்கள்:
“கட்சிக்காகத் தொடர்ந்து உழைத்த சி.விஜயபாஸ்கர் தனது சொத்துக்களை ஒப்படைக்க வேண்டும் என்று கூறுவதற்கு ஆர்.பி.உதயகுமாருக்கு என்ன தகுதி இருக்கிறது? அவ்வாறு கேட்பதற்கு அவர் யார்?”
என்று காரசாரமாகக் கேள்வி எழுப்பினர். அதிமுக தலைமைக்கு எதிராகவும், ஆர்.பி.உதயகுமாரின் விமர்சனங்களுக்கு எதிராகவும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகள் தங்களது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியதால் புதுக்கோட்டை அரசியல் களம் பெரும் பரபரப்பாகக் காணப்படுகிறது.




