பரபரப்பான அரசியல் சூழலில் ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது தவெக அரசின் முதல் சட்டப்பேரவைக் கூட்டம்!
தமிழகத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசின் முதலாவது சட்டப்பேரவைக் கூட்டத்தொடர், ஆளுநர் உரையுடன் வியாழக்கிழமை (இன்று) காலை முறைப்படி தொடங்குகிறது. புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் கூட்டத்தொடர் என்பதால், இதில் ஏதேனும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் இடம்பெறுமா என்ற பலத்த எதிர்பார்ப்பு ஒட்டுமொத்த தமிழக மக்கள் மத்தியிலும் எழுந்துள்ளது.
வியாழக்கிழமை காலை 10 மணிக்குத் தொடங்கும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டத்தொடரில், தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கலந்துகொண்டு தனது முறைப்படியான உரையை ஆற்றவுள்ளார். ஆளுநரின் இந்த உரை ஆங்கிலத்தில் சுமார் ஒரு மணி நேரம் நீடிக்கும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம்!
ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தனது ஆங்கில உரையை நிறைவு செய்த பின்னர், அந்த உரையின் தமிழாக்கத்தைச் சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அவையில் முறைப்படி தமிழில் வாசிப்பார்.
இதனைத் தொடர்ந்து, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தை எத்தனை நாட்களுக்கு நடத்துவது மற்றும் அடுத்தடுத்த சட்டப்பேரவை அமர்வுகளை எவ்வாறு கொண்டு செல்வது என்பது குறித்து விவாதித்து இறுதி முடிவு எடுப்பதற்காகச் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு (Business Advisory Committee) கூட்டம் நடைபெறும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய அரசின் முதல் கூட்டத்தொடர் என்பதால் இக்கூட்டத்தொடர் முழுவதும் மிகுந்த அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.




