சென்னை ராமாபுரத்தில் நள்ளிரவில் அதிரடிச் சாலை மறியல்: தொடர் மின்வெட்டால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் தவெக அரசுக்கு எதிராகப் போராட்டம்!
சென்னை ராமாபுரத்தில் கடந்த சில வாரங்களாக நீடித்து வரும் கடுமையான மின்வெட்டு மற்றும் குறைந்த மின்னழுத்தப் (Low Voltage) பிரச்சினை காரணமாக ஆத்திரமடைந்த பொதுமக்கள், நள்ளிரவில் வீதிக்கு வந்து தவெக அரசுக்கு எதிராகக் கண்டனக் குரல் எழுப்பிச் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ராமாபுரம் ஆண்டாள் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாகப் போதியப் பராமரிப்பின்றித் தொடர் மின்வெட்டுப் பிரச்சினை நீடித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் நள்ளிரவில் தூக்கத்தைத் தொலைத்து அவதிக்குள்ளான நூற்றுக்கணக்கான பொதுமக்களும், பெண்களும் சாலையில் திரண்டு தங்களது பலத்த எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறுகையில், “எங்கள் பகுதியில் சுமார் 20 முதல் 30 ஆண்டுகள் பழமையான, மிகவும் பழுதடைந்த மின் உள்கட்டமைப்புகள் மற்றும் மின் கம்பிகள் மட்டுமே இன்னும் பயன்பாட்டில் உள்ளன; இவற்றை நவீனப்படுத்த ஆளும் அரசு எந்தவொரு நடடிவக்கையும் எடுக்கவில்லை. இதன் காரணமாகவே தினமும் நள்ளிரவில் 3 மணி நேரத்திற்கும் மேலாகத் தொடர் மின்தடை ஏற்பட்டு முதியவர்களும், குழந்தைகளும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், அடிக்கடி ஏற்படும் குறைந்த மின்னழுத்தப் பிரச்சினையால் வீடுகளில் உள்ள விலைமதிப்பற்ற குளிர்சாதனப் பெட்டி, தொலைக்காட்சி உள்ளிட்ட மின்சாதனப் பொருட்கள் முற்றிலும் பழுதடைந்து சேதமடைகின்றன” எனக் குற்றம்சாட்டினர். எனவே, மின்சாரத் துறை உடனடியாகத் தலையிட்டு தங்கள் பகுதிக்கு எனப் புதிய மின்மாற்றி (Transformer) ஒன்றினை அமைத்து, தடையற்ற சீரான மின் விநியோகம் வழங்கப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




