ரஷ்யாவின் 4-வது எஸ் 400 பாதுகாப்பு வாகனம் இந்தியா வருகை: விரைவில் எல்லையில் நிறுத்த நடவடிக்கை!
புதுடெல்லி:
ரஷ்யாவிடமிருந்து இந்தியா வாங்க ஒப்பந்தம் செய்திருந்த அதிநவீன வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பான ‘எஸ் 400’ (S-400) தொடரின் நான்காவது வான் பாதுகாப்பு கவச வாகனம் தற்போது பாதுகாப்பாக இந்தியா வந்தடைந்துள்ளது. இந்தியாவின் ‘சுதர்சன சக்கரம்’ என்று பெருமையுடன் அழைக்கப்படும் இந்த வான் பாதுகாப்பு கவச வாகனம், சுமார் 600 கிலோமீட்டர் தொலைவில் எதிரி நாடுகள் ஏவும் ஏவுகணைகள் மற்றும் போர் விமானங்களை முன்கூட்டியே மிகத் துல்லியமாகக் கண்காணித்துத் தகர்க்கும் அசாத்திய திறன் கொண்டதாகும். கடந்த 2018ஆம் ஆண்டில், மொத்தம் ஐந்து எஸ் 400 வான் பாதுகாப்பு அமைப்புகளை வாங்குவதற்காக ரஷ்யாவுடன் இந்தியா வரலாற்றுச் சிறப்புமிக்க பாதுகாப்பு ஒப்பந்தம் மேற்கொண்டது.
அதன்படி, ஏற்கனவே மூன்று வான் பாதுகாப்பு கவச வாகனங்களை ரஷ்யா இந்தியாவிற்கு அனுப்பியிருந்தது. அண்மையில் நடைபெற்ற ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் போது, இந்த பாதுகாப்பு கவச வாகனம் மிகச் சிறப்பாகவும், அசாத்திய திறனுடனும் செயல்பட்டது. இதனால் எஞ்சிய இரண்டு வான் பாதுகாப்பு வாகனங்களையும் தங்களுக்கு விரைந்து அனுப்பி வைக்குமாறு ரஷ்யாவிடம் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தியது. இதன்பொருட்டு, கடந்த ஏப்ரல் மாத இறுதியில் ரஷ்யா கப்பல் மூலம் அனுப்பி வைத்த 4-வது வான் பாதுகாப்பு கவச வாகனம் இந்தியா வந்தடைந்துள்ளது. இது ராணுவ சோதனைகளுக்குப் பின் விரைவில் இந்திய எல்லையில் முக்கியப் பாதுகாப்புப் பணியில் நிறுத்தப்பட உள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.






