“பழைய பதவிகளைப் பயன்படுத்தக் கூடாது!” – கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டவர்களுக்கு இபிஎஸ் அதிரடி உத்தரவு!
சென்னை:
அதிமுகவில் கட்சிப் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டவர்கள், தங்களது பழைய பதவிகளைக் குறிப்பிட்டுப் பத்திரிகைகளிலோ அல்லது இதர ஊடகங்களிலோ விளம்பரப் படுத்தக் கூடாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (EPS) கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளார். இதுதொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், “கழகப் பொறுப்புகளில் இருந்து முறைப்படி விடுவிக்கப்பட்டவர்கள், தங்களின் பழைய பொறுப்புகளைப் பயன்படுத்தி விளம்பரங்கள் செய்வதைத் தவிர்க்க வேண்டும். இதனை அனைத்துக் கழக நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்” என்று தலைமைக் கழகம் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் முழு ஒப்புதலுடன் இந்த முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசியலில் அண்மைக் காலமாக நிலவி வரும் பல்வேறு அதிரடி மாற்றங்களுக்கு மத்தியிலும், குறிப்பாக எஸ்.பி. வேலுமணி தரப்பினர் மீண்டும் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து தங்களது ஆதரவை உறுதிப்படுத்திய சூழலிலும் இந்த உத்தரவு வெளியாகியிருப்பது அரசியல் வட்டாரத்தில் உற்று நோக்கத்தக்கதாக மாறியுள்ளது. உட்கட்சி ஒழுங்கை நிலைநாட்டவும், பொறுப்பில் இல்லாதவர்கள் தங்களை இன்னமும் நிர்வாகிகளாகக் காட்டிக் கொள்வதைத் தடுக்கவுமே இந்த அதிரடி கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக அதிமுக மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.




