மோந்தா புயல் கரையை கடந்தது: ஆந்திராவில் பெரும் சேதம் – 2 பெண்கள் உயிரிழப்பு
ஆந்திராவில் கடந்த இரவு காக்கிநாடா – மசூலிப்பட்டினம் இடையே அமைந்த அந்தர்வேதிப்பாளையம் அருகே ‘மோந்தா’ புயல் கரையை கடந்தது. புயல் கடக்கும் போது மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் பலத்த சூறாவளிக் காற்று வீசியது.
இதன் தாக்கத்தில் காக்கிநாடா, மசூலிப்பட்டினம், கோனசீமா உள்ளிட்ட பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மரங்கள் சாய்ந்தன, வீடுகள் சேதமடைந்தன, மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கோனசீமா மாவட்டத்தில் 2 பெண்கள் மரம் விழுந்து உயிரிழந்தனர். மேலும், 50-க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்தன.
புயலால் 107 ரயில்கள், 18 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கின. 1,200-க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, 75,000 பேருக்கு மேல் தங்குமிடம் வழங்கப்பட்டுள்ளது.
மோந்தா புயல், வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்திலிருந்து வலுப்பெற்று புயலாக மாறியது. நேற்று இரவு 8.40 மணிக்கு கரையைக் கடக்கத் தொடங்கி, நள்ளிரவு 1.30 மணி வரை நீடித்தது.
காற்று–மழை தாக்கத்தால் விசாகப்பட்டினம் முதல் நெல்லூர் வரை கடலோர மாவட்டங்கள் முழுவதும் மின்தடை, சாலைகள் சேதம், இணையத் தடை போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டன. கடல் நீர் 200–500 அடி வரை கரையைக் கடந்தது.
மீட்பு மற்றும் நிவாரண பணிகளை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண், மற்றும் அமைச்சர்கள் லோகேஷ், அனிதா தலைமையில் விரைவாக முன்னெடுத்துள்ளனர்.
தெலங்கானா, ஒடிசா மாநிலங்களிலும் புயலின் தாக்கம் காணப்பட்டது. பல மாவட்டங்களில் கனமழை மற்றும் பலத்த காற்று வீசியது.