“வெறும் 15 நாட்களில் 25 கொலைகள்!” – தவெக அரசின் சட்டம் ஒழுங்கு குறித்து மாஜி அமைச்சர் டி.ஜெயக்குமார் கடும் சாடல்
சென்னை:
தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு பொறுப்பேற்ற வெறும் 15 நாட்களிலேயே சட்டம் ஒழுங்கு மிக மோசமாகச் சீர்குலைந்துள்ளதாக அதிமுகவின் கழக அமைப்பு செயலாளரும், வடசென்னை தெற்கு (கி) மாவட்ட கழக செயலாளருமான முன்னாள் அமைச்சர் D.ஜெயக்குமார் B.B. கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், தவெக ஆட்சியின் கடந்த 15 தினங்களில் மட்டும் தமிழகத்தில் 25 கொலைகள், 4 இரட்டைக் கொலைகள் மற்றும் 19 பாலியல் குற்றங்கள் அரங்கேறியுள்ளதாக அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்களைப் பட்டியலிட்டுள்ளார்.
”ஆட்சி மாறினால் காட்சி மாறும் என்று தேர்தல் நேரத்தில் மேடைகளில் முழங்கியவர்களின் தற்போதைய செயல்பாடுகளும், சட்டம் ஒழுங்கு நிலவரமும் இதேதானா? இதுதான் நீங்கள் சொன்ன மாற்றமா?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவும், பொதுமக்களின் அச்சத்தைப் போக்கவும் அரசு உடனடியாகக் களமிறங்கி அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஜெயக்குமார், “இனி என்ன செய்யப் போகிறீர்கள் முதல்வர் விஜய் அவர்களே?” என்று நேரடியாகக் கேள்வி எழுப்பித் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.





