“சித்தராமையாவின் முடிவே இறுதி” – முதல்வர் மாற்றம் குறித்த டி.கே. சிவக்குமார் விளக்கம்
கர்நாடகாவில் முதல்வர் மற்றும் அமைச்சரவை மாற்றம் குறித்து கிளம்பிய பேச்சுக்களுக்கு பதிலளித்த துணை முதல்வர் டி.கே. சிவக்குமார், “முதல்வர் சித்தராமையாவின் முடிவே இறுதி” என தெரிவித்துள்ளார்.
கர்நாடக அரசில் விரைவில் அமைச்சரவை மாற்றம் ஏற்படும் என்ற செய்தி பரவி வரும் நிலையில், அதுகுறித்து முதல்வர் சித்தராமையா விளக்கம் அளித்திருந்தார். அவர், “காங்கிரஸ் உயர் தலைமையின் எந்த முடிவையும் மதிப்பேன். தலைமை முடிவு செய்தால், நான் எனது பதவிக்காலத்தை நிறைவு செய்கிறேன்” என்று கூறியிருந்தார்.
இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, டி.கே. சிவக்குமார் கூறியதாவது:
“முதல்வர் கூறிய பிறகு, அதைப் பற்றிப் பேச என்னிடம் ஒன்றுமில்லை. நாங்கள் அவருடைய வழிகாட்டுதலைப் பின்பற்றுகிறோம். அவருடைய வார்த்தையே இறுதி முடிவு,” என்றார்.
தனது டெல்லி பயணம் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:
“நான் காங்கிரஸ் மூத்த தலைவி அம்பிகா சோனியின் இல்லத்திற்கு சென்றேன். அவருடைய கணவர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கச் சென்றேன். நான் திஹார் சிறையில் இருந்தபோது, சோனியா காந்தியுடன் அவர் வந்து என்னைச் சந்தித்தார். அவர் எனக்கு மிகவும் நெருக்கமானவர் — ஒரு தம்பியைப் போல நடத்துகிறார்.
நான் டெல்லி சென்றது இதற்காகத்தான். உயர் தலைமையுடனான எனது சந்திப்பு குறித்து மக்கள் பேசலாம்; அதில் எனக்கு பிரச்சினை இல்லை,” என்று கூறினார்.
இதற்கு முன்னதாக, கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வரா கூறியிருந்ததாவது:
“முதல்வர் அல்லது அமைச்சரவை மாற்றம் குறித்து கட்சியின் உயர் தலைமையே முடிவு செய்யும். எம்.எல்.ஏக்களின் தனிப்பட்ட கருத்துகள் பொருத்தமற்றவை. இதுவரை எனக்கு எந்த உத்தரவுமில்லை. பிஹார் தேர்தல் முடிந்த பின் முதல்வரும் துணை முதல்வரும் டெல்லி செல்லவுள்ளனர்; அப்போது முடிவு வெளியாகலாம்,” என்றார்.