“எனது பொது வாழ்க்கையின் தொடக்கம் கோவையில் தான்” – பெருமிதத்துடன் கூறிய குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்
கோவையில்தான் தனது பொது வாழ்க்கையை ஆரம்பித்ததாகவும், அதைச் சொல்லும் போது பெருமை அடைகிறேன் என்றும் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
செஷெல்ஸ் நாட்டில் நடைபெற்ற அந்நாட்டு அதிபர் டாக்டர் பாட்ரிக் ஹெர்மினியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட பிறகு, குடியரசு துணைத் தலைவராக பதவியேற்ற பின் முதன்முறையாக அவர் தமிழகத்துக்கு, குறிப்பாக கோவைக்கு, இன்று வந்தடைந்தார்.
கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதையடுத்து, கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் அவருக்கு சிறப்பு பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவை ‘கோயம்புத்தூர் சிட்டிசன்ஸ் போரம்’ மற்றும் பல தொழில் அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
விழாவில் உரையாற்றிய சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
“எனது பொது வாழ்க்கையை கோவையில்தான் தொடங்கினேன்; அதில் எனக்கு பெருமை. நாடு முன்னேறினால் தான் நாம் முன்னேற முடியும். விவசாயமும் தொழில்துறையும் நாட்டின் வளர்ச்சிக்கு இரு முக்கிய துறைகள்.
தென்னை நார் வாரியத்தின் தலைவராக என்னை நம்பி பிரதமர் நரேந்திர மோடி பொறுப்பை அளித்தார்; அந்தப் பொறுப்பை சிறப்பாக நிறைவேற்றியதற்காக அவர் அதை மேலும் ஓராண்டு நீட்டித்தார். பின்னர், மூன்று மாநிலங்களுக்கு ஒரே நேரத்தில் ஆளுநராகவும், அதன் பிறகு மகாராஷ்டிரா ஆளுநராகவும் பணியாற்றினேன்.
இன்று குடியரசு துணைத் தலைவராகச் செயல்படுவது எனக்கு பெரும் பொறுப்பு. முயற்சி நம் கையில், முடிவு இறைவனின் கையில் — அதுதான் என் நம்பிக்கை. கோவை விமான நிலைய வளர்ச்சிக்காக முழு ஆதரவையும் வழங்குவேன்.”
விழாவில் ‘கொடிசியா’ தலைவர் கார்த்திகேயன், சக்தி குழுமத் தலைவர் மாணிக்கம், கே.ஜி. குழுமத் தலைவர் பாலகிருஷ்ணன், இந்திய தொழில் வர்த்தக சபை (ஃபிக்சி) கோவை தலைவர் ராஜேஷ் லுன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர், இன்று மாலை கோவையிலிருந்து திருப்பூர் புறப்பட்டுச் செல்லும் சி.பி. ராதாகிருஷ்ணன், அங்கு திருப்பூர் குமரன் மற்றும் மகாத்மா காந்தி சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்துகிறார். நாளை (அக். 29) திருப்பூரில் நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்று, அதன் பின்னர் மதுரை சென்று மீனாட்சி அம்மன் கோயிலில் வழிபாடு செய்வார். மேலும், அக். 30 அன்று பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி நிகழ்வில் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் கலந்து கொள்கிறார்.