ஆளுநரை 2-வது முறையாகச் சந்தித்த விஜய்: 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவை நிரூபிக்க நிபந்தனை!
சென்னை: தமிழகத்தில் புதிய அரசு அமைப்பதில் நிலவி வரும் அரசியல் குழப்பங்களுக்கு இடையே, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று 2-வது முறையாக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை ஆளுநர் மாளிகையில் (மக்கள் மாளிகை) சந்தித்துப் பேசினார். சுமார் 20 நிமிடங்கள் நீடித்த இந்தச் சந்திப்பு, தமிழக அரசியலில் மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
ஆளுநர் எழுப்பிய 3 முக்கிய கேள்விகள்
ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கும் தகவலின்படி, விஜயுடனான சந்திப்பின் போது ஆளுநர் அர்லேகர் சில முக்கியக் கேள்விகளை முன்வைத்ததாகத் தெரிகிறது:
- நிலையான அரசு: தற்போதைய நிலையில் தவெக மற்றும் அதன் ஆதரவு சக்திகளிடம் 112 எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே உள்ளனர். இந்த எண்ணிக்கையை வைத்துக்கொண்டு ஒரு நிலையான அரசை உங்களால் வழங்க முடியுமா?
- ஆதரவு கட்சிகள்: தவெக மற்றும் காங்கிரஸைத் தவிர, வேறு எந்தெந்தக் கட்சிகள் அல்லது சுயேச்சை உறுப்பினர்கள் உங்கள் அரசுக்கு ஆதரவு அளிக்க முன்வந்துள்ளனர்?
- பெரும்பான்மை நிரூபிப்பு: ஒருவேளை உங்களுக்கு ஆட்சியமைக்க வாய்ப்பு அளிக்கப்பட்டால், பதவியேற்ற பிறகு சட்டப்பேரவையில் உங்களால் பெரும்பான்மையை (118 இடங்கள்) நிரூபிக்க முடியும் என எப்படி உறுதியாக நம்புகிறீர்கள்?
பதவியேற்பு எப்போது?
ஆட்சியமைக்கத் தேவையான 118 உறுப்பினர்களின் ஆதரவு கடிதங்களை முறையாகச் சமர்ப்பித்தால் மட்டுமே, விஜய்க்குப் பதவியேற்க அழைப்பு விடுக்கப்படும் என்பதில் ஆளுநர் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது. பெரும்பான்மைக்கு இன்னும் 6 இடங்கள் தேவைப்படும் நிலையில், விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவு கடிதத்திற்காகத் தவெக காத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
ஆவணங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் உடனடியாகப் பதவியேற்புக்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், ஆதரவு கடிதங்களைச் சமர்ப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டால், தமிழகத்தில் புதிய அரசு அமைவது தள்ளிப்போகக்கூடும்.




