தமிழக அரசியலில் அதிரடித் திருப்பம்: விஜய்க்கு அழைப்பு விடுக்காத ஆளுநர் – எம்.எல்.ஏ-க்களைப் பாதுகாக்க திமுக, அதிமுக தீவிரம்
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத மிகப்பெரிய திருப்புமுனையாக, சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆட்சியமைக்க ஆளுநர் இன்னும் அழைப்பு விடுக்கவில்லை. தவெக தலைவர் விஜய் ஆளுநரைச் சந்தித்து உரிமை கோரிய நிலையில், தவெக-வுக்கு காங்கிரஸ் தவிர மற்ற கட்சிகளின் ஆதரவு கிடைக்காததால், ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை (Majority) இல்லை என்பதைக் காரணம்காட்டி ஆளுநர் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
இந்த அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை முதலே அக்கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். மற்றொருபுறம், நிலவும் அரசியல் சூழலைக் கருத்தில்கொண்டு, தங்கள் கட்சி எம்.எல்.ஏ-க்கள் அணி மாறுவதைத் தவிர்க்கும் பொருட்டு, திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தங்களது எம்.எல்.ஏ-க்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கத் தீவிர ஏற்பாடுகளைச் செய்து வருகின்றன.
பெரும்பான்மையை நிரூபிப்பதில் ஏற்பட்டுள்ள இந்தச் சிக்கலால் தமிழக அரசியலில் தற்போது பெரும் பரபரப்பும் எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.



