டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தல்: பாஜக அமோக வெற்றி – மேயராக பிரவேஷ் வஹி தேர்வு!
டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) அமோக வெற்றி பெற்றுள்ளது. இத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட பிரவேஷ் வஹி, மொத்தமாக 156 வாக்குகள் பெற்று டெல்லி மாநகராட்சியின் புதிய மேயராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ரோஹினி கிழக்கு வார்டில் இருந்து தொடர்ந்து மூன்று முறை கவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அனுபவம் கொண்ட இவருக்கு, இந்தத் தேர்தலில் பெரும் ஆதரவு கிடைத்துள்ளது.
அதேநேரம், மேயர் பதவிக்குப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஹசி ஸராஃப் வெறும் 9 வாக்குகளை மட்டுமே பெற்றுத் தோல்வியடைந்தார். துணை மேயர் பதவிக்கும் பாஜக-வைச் சேர்ந்த மோனிகா பன்ட் வெற்றி பெற்றுத் தேர்வாகியுள்ளார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிலைக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தலில், பாஜக-வைச் சேர்ந்த ஜெய்பகவன் யாதவ் மற்றும் மனீஷ் சத்தா ஆகியோரும், ஆம் ஆத்மி கட்சி சார்பில் ஜலஜ் சவுத்ரியும் உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். டெல்லி மாநகராட்சியில் பாஜக பெற்ற இந்த வெற்றி அக்கட்சியினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.





