கிளாம்பாக்கத்தில் அலைமோதிய கூட்டம்: போதிய பேருந்துகள் இல்லாததால் வாக்காளர்கள் அவதி!
சென்னை: தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, சென்னையில் தங்கிப் பணியாற்றும் பொதுமக்கள் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றச் சொந்த ஊர்களுக்குப் படையெடுத்து வருகின்றனர். இதன் காரணமாக, சென்னையின் முக்கிய நுழைவாயிலான கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நேற்று இரவு முதல் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டனர்.
தென் மாவட்டங்களுக்குச் செல்ல வேண்டிய பயணிகள் அதிக அளவில் குவிந்த நிலையில், அங்கு போதிய அரசுப் பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். நீண்ட நேரம் காத்திருந்தும் பேருந்துகள் கிடைக்காததால் பயணிகள் மத்தியில் அதிருப்தி நிலவியது.
இதனைத் தொடர்ந்து, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர அதிகாரிகள் மாற்று ஏற்பாடுகளைச் செய்தனர். அரசுப் பேருந்துகளின் பற்றாக்குறையைப் போக்க, தனியார் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, அவற்றின் மூலம் பொதுமக்களைச் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கும் பணியில் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டனர்.




