சாத்தூரில் நயினார் நாகேந்திரன் தீவிர பரப்புரை: சாலையோரக் கடையில் பூரி சுட்டு நூதன முறையில் வாக்கு சேகரிப்பு!
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்றத் தொகுதி பாஜக வேட்பாளரும், அக்கட்சியின் மாநிலத் தலைவருமான நயினார் நாகேந்திரன், கடந்த 10 நாட்களுக்கும் மேலாகத் தொகுதியில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக, சாத்தூர் பேருந்து நிலையம் முன்பிருந்து தனது பிரச்சாரத்தைத் தொடங்கிய அவர், அதிமுக கிழக்கு மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து வீதி வீதியாகச் சென்று தாமரை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்.
பிரச்சாரத்தின் போது அங்கிருந்த சாலையோர உணவகத்திற்குச் சென்ற நயினார் நாகேந்திரன், அங்கிருந்தவர்களுடன் கலந்துரையாடி பூரி சுட்டுக்கொடுத்து நூதன முறையில் வாக்கு சேகரித்தார். தொடர்ந்து தேநீர் கடைக்குச் சென்று தேநீர் அருந்தியவாறு பொதுமக்களிடம் உரையாடிய அவர், பின்னர் அங்கு வந்த பள்ளி மாணவிகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அப்போது, மாணவிகளின் பெற்றோரிடம் தாமரை சின்னத்திற்கு வாக்களிக்கச் சொல்லுமாறு அவர் அன்புடன் கேட்டுக்கொண்டார்.




