“ஊழல் ஆட்சியால் திமுகவை மக்கள் நிராகரிப்பார்கள்” – மயிலாப்பூரில் தமிழிசைக்காக ஜி.கே.வாசன் பரப்புரை!
சென்னை மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜனை ஆதரித்து, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திறந்த வாகனத்தில் சென்ற அவர், தேசிய ஜனநாயகக் கூட்டணி அறிவித்துள்ள தேர்தல் வாக்குறுதிகளைப் பொதுமக்களிடம் எடுத்துரைத்து ஆதரவு கோரினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன், மயிலாப்பூர் தொகுதியில் தமிழிசை சௌந்தரராஜனுக்கு ஆதரவு அலை மிக வலுவாக வீசுவதாகவும், சாதி, மத பேதமின்றி அனைத்துத் தரப்பு மக்களும் அவருக்கு ஆதரவு அளித்து வருவதாகவும் தெரிவித்தார். கடந்த ஐந்து ஆண்டுகளாக திமுக அரசு எந்தவித வெளிப்படைத்தன்மையும் இல்லாமல் செயல்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டிய அவர், நிலவி வரும் ஊழல் காரணமாகவே வரவிருக்கும் தேர்தலில் மக்கள் திமுகவை முற்றிலுமாக நிராகரிப்பார்கள் என உறுதிபடத் தெரிவித்தார்.





