தமிழகத்தில் அதிரடி மாற்றம்: புதிய தலைமைச் செயலாளராக சாய்குமார், லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக சந்தீப் மிட்டல் நியமனம்!
தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், மாநிலத்தின் மிக முக்கிய அதிகாரிகளைத் தேர்தல் ஆணையம் அதிரடியாக இடமாற்றம் செய்துள்ளது. இதன்படி, தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த என். முருகானந்தம் ஐ.ஏ.எஸ். மாற்றப்பட்டு, புதிய தலைமைச் செயலாளராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி எம். சாய்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல், லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) டி.ஜி.பி.யாகப் பணியாற்றி வந்த எஸ். டேவிட்சன் தேவாசீர்வாதம் ஐ.பி.எஸ். இடமாற்றம் செய்யப்பட்டு, அவருக்குப் பதிலாகச் சந்தீப் மிட்டல் ஐ.பி.எஸ். புதிய லஞ்ச ஒழிப்புத்துறை டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தேர்தல் நேரத்தில் நிர்வாக இயந்திரம் நடுநிலையுடன் செயல்படுவதை உறுதி செய்யும் நோக்கில், எதிர்க்கட்சிகளின் புகார்களைத் தொடர்ந்து இந்த அதிரடி மாற்றங்களைத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. மாற்றப்பட்ட அதிகாரிகள் தேர்தல் தொடர்பான எந்தப் பணிகளிலும் ஈடுபடக்கூடாது என்றும், புதிய அதிகாரிகள் உடனடியாகப் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் என்றும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தலுக்குச் சில வாரங்களே உள்ள நிலையில், இந்த உயர்நிலை அதிகாரிகளின் மாற்றம் அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




