நன்னிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை: 15 ஆண்டுகால வளர்ச்சிப் பணிகளைக் கூறி ஆர்.காமராஜ் வாக்கு சேகரிப்பு!
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் ஆலோசனைக் கூட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது. திருவாரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், நன்னிலம் தொகுதி வேட்பாளருமான ஆர்.காமராஜ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கூட்டணிக் கட்சிகளான பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் திரளாகக் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் உரையாற்றிய ஆர்.காமராஜ், “கடந்த 15 ஆண்டுகளாக நன்னிலம் தொகுதி மக்களின் பேராதரவோடு சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றி வருகிறேன். இத்தொகுதியை முழுமையான வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்லவும், மக்கள் நலப்பணிகள் தடையின்றித் தொடரவும் மீண்டும் எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார். மேலும், அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றுவேன் என்றும் அவர் உறுதி அளித்தார். தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கூட்டணிக் கட்சியினரின் இந்த ஆலோசனை கூட்டம் நன்னிலம் தொகுதி அதிமுகவினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.







