உத்தரபிரதேசம்: கங்கை நதியில் நூற்றுக்கணக்கான சாதுக்கள் புனித நீராடல் – ஆன்மீக முழக்கங்களுடன் உற்சாக ஊர்வலம்!
உத்தரபிரதேச மாநிலம் ஃபரூக்காபாத்தில், ஸ்ரீ பஞ்ச் அகில பாரதிய நிர்மோகி அனி அகாராவைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான சாதுக்கள் கங்கை நதியில் புனித நீராடும் வைபவம் விமரிசையாக நடைபெற்றது.
முன்னதாக, நிர்மோகி அனி அகாராவின் சாதுக்கள் தங்களது பாரம்பரிய ஆயுதங்கள் மற்றும் கொடிகளுடன் ஃபரூக்காபாத் நகர் பகுதியில் பிரம்மாண்ட ஊர்வலம் நடத்தினர். நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற இந்த ஊர்வலத்தின் போது, சாதுக்களின் ஆன்மீக முழக்கங்களால் அந்தப் பகுதியே பக்திப் பரவசத்தில் மூழ்கியது.
சாதுக்களின் வருகையையொட்டி மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் சிறப்பான வரவேற்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். ஊர்வலம் சென்ற பாதை முழுவதும் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் மலர் தூவி மரியாதை செலுத்தியதோடு, சாதுக்களுக்கு மலர் மாலைகள் அணிவித்து வரவேற்றனர்.
இந்த ஊர்வலத்தைத் தொடர்ந்து, சாதுக்கள் அனைவரும் கங்கை நதியில் இறங்கி புனித நீராடினர். இந்நிகழ்வையொட்டி எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வண்ணம் காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த ஆன்மீக நிகழ்வில் கலந்துகொண்டு சாதுக்களின் தரிசனத்தைப் பெற்றனர்.










