மதுரையில் அவசர கதியில் அமைக்கப்பட்ட தார் சாலை: கையோடு பெயர்ந்து வரும் அவலத்தால் அவனியாபுரம் மக்கள் கொதிப்பு!
மதுரை:
மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் தேர்தல் நெருங்கும் வேளையில், அவசர அவசரமாக அமைக்கப்பட்ட தார் சாலை தரம் குறைந்த நிலையில் இருப்பதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். திருப்பரங்குன்றம் அடுத்த அவனியாபுரம் எஸ்.ஆர்.வி நகர் பகுதியில், கடந்த பல ஆண்டுகளாகச் சாலை வசதி இன்றி மக்கள் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் திடீரென புதிய தார் சாலை அமைக்கப்பட்டது.
இருப்பினும், இந்தச் சாலை மிகவும் தரமற்ற முறையில் போடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கும் அப்பகுதி மக்கள், சாலையைத் தொட்டாலே தார் மற்றும் ஜல்லிக் கற்கள் கையோடு பெயர்ந்து வருவதாகப் புகார் தெரிவித்துள்ளனர். தேர்தலை முன்னிட்டு அவசர கதியில் கண்துடைப்புக்காக இத்தகைய பணிகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கும் மக்கள், இந்தத் தரமற்ற சாலையை அகற்றிவிட்டு மீண்டும் தரமான முறையில் புதிய சாலையை அமைத்துத் தர வேண்டும் எனத் தீவிரமாக வலியுறுத்தியுள்ளனர். அரசு நிதியை வீணடிக்கும் ஒப்பந்ததாரர்கள் மற்றும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.









