“உள்நாட்டு தயாரிப்புகளைப் பயன்படுத்துங்கள்” – கோவை பட்டமளிப்பு விழாவில் சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி அறிவுரை
கோவை:
கோவையில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தின் 37-வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி, மாணவிகள் உள்நாட்டுத் தயாரிப்புகளைப் பயன்படுத்துவதில் ஆர்வம் காட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்த விழாவில் தரவரிசையில் சிறப்பிடம் பிடித்த 94 மாணவிகளுக்குப் பதக்கங்களை வழங்கி கௌரவித்த அவர், மொத்தம் 2,328 மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், இந்தியக் கல்வி முறையின் வளர்ச்சி குறித்துப் பேசுகையில், வரும் 2035-ம் ஆண்டில் இந்தியா கல்வித்துறையில் உலகளவில் சிறந்து விளங்கும் நாடாக உருவெடுக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். மேலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்த மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் உள்நாட்டுத் தயாரிப்புகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அவர் தனது உரையில் வலியுறுத்தினார்.








