நத்தம் கல்குவாரியில் இளைஞர் சடலம்: திமுக எம்.எல்.ஏ-வுக்குத் தொடர்புள்ளதா? அண்ணாமலை அதிரடி கேள்வி!
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள தனியார் கல்குவாரியில் இளைஞர் ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
நத்தம் பகுதியில் கடந்த 10 நாட்களாகக் காணாமல் தேடப்பட்டு வந்த கருப்பசாமி என்ற இளைஞர், அங்குள்ள தனியார் கல்குவாரியின் 10 அடி ஆழமான பகுதியில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தச் செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் பல்வேறு சந்தேகங்களையும் எழுப்புவதாக அண்ணாமலை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, அந்த இளைஞரைத் தேடி குவாரிக்குச் சென்றபோது, அவர் அங்கு வரவில்லை என்று நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டதாகத் தெரிகிறது.
இந்தக் கல்குவாரி, ஸ்ரீரங்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டிக்குத் தொடர்புடையது என்று சுட்டிக்காட்டியுள்ள அண்ணாமலை, ஏற்கனவே ஊடகவியலாளர்களைக் கடத்தித் தாக்கிய புகாரில் சிக்கியவர் பழனியாண்டி என்றும், அவர் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ என்பதால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார். தற்போது ஒரு இளைஞரின் உயிர் பறிபோயுள்ள நிலையில், இது விபத்தா அல்லது திட்டமிடப்பட்ட கொலையா என்பதைத் தீவிர விசாரணை மூலம் கண்டறிய வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். குவாரி நிர்வாகம் மற்றும் அதன் பின்னணியில் உள்ள அரசியல் செல்வாக்குகள் குறித்துக் காவல்துறை நேர்மையான விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.








