அம்பாசமுத்திரம் அருகே பரபரப்பு: சிறுவன் மீது பள்ளி மாணவன் அரிவாள் வீச்சு!
அம்பாசமுத்திரம்: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மன்னார்கோவில் பகுதியில் ஏற்பட்ட சிறு தகராறில், 16 வயது சிறுவனை பள்ளி மாணவன் ஒருவன் அரிவாளால் கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மன்னார்கோவில் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவர், தனது பள்ளிப் படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு பூக்கட்டும் தொழில் செய்து வருகிறார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவன் ஒருவருக்கும் இடையே திடீரென வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், கடும் ஆத்திரமடைந்த அந்த மாணவன், தனது வீட்டிற்குச் சென்று அரிவாளை எடுத்து வந்து சிறுவனை சரமாரியாகத் தாக்கியுள்ளார். தாக்குதலுக்குப் பிறகு அந்த மாணவன் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
இதில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த சிறுவனை, அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அந்த சிறுவன் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த 11-ஆம் வகுப்பு மாணவனைப் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.