“திமுகவை வீட்டிற்கு அனுப்பும் திருப்புமுனை”: பிரதமர் பங்கேற்கும் திருச்சி மாநாடு குறித்து எல்.முருகன் ஆவேசம்!
திருச்சியில் நடைபெற உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) பிரம்மாண்ட மாநாடு, தமிழகத்தில் திமுக ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான தொடக்கமாக அமையும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதுவரை திருச்சி மக்கள் பார்த்திராத வகையில் இந்த மாநாடு அமையவுள்ளது என்றும், ஏற்கனவே மதுராந்தகத்தில் நடைபெற்ற கூட்டமே திமுகவிற்குப் பெரும் நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மக்களுக்கு விரோதமாகச் செயல்படும் திமுக அரசை வீட்டிற்கு அனுப்பும் கூட்டமாக இது இருக்கும் எனச் சாடிய அவர், தமிழகத்தின் வளர்ச்சிக்காகப் பிரதமர் மோடி சுமார் ₹6,000 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை இன்று வழங்க உள்ளதாகத் தெரிவித்தார். குறிப்பாக, எரிசக்தி, சாலை மற்றும் ரயில்வே கட்டமைப்புத் திட்டங்கள் இதில் அடங்கும்.
மாநாட்டில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பங்கேற்பாரா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “கூட்டணிக்கு அனைவரும் வருவார்கள்” என்று சுருக்கமாகப் பதிலளித்தார். சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், திருச்சி பஞ்சப்பூரில் நடைபெறும் இந்த மாநாடு தமிழக அரசியலில் ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.