“மாணவர்களை மருத்துவமனைக்கு அனுப்ப ஏன் தாமதம்?” – கோவை பள்ளி விவகாரத்தில் எம்.எல்.ஏ அருண்குமார் கேள்வி!
கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மதிய உணவு உட்கொண்ட 44 மாணவர்கள் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதிய உணவில் பல்லி விழுந்ததே இந்த உடல்நலக்குறைவுக்குக் காரணம் எனக் கூறப்படும் நிலையில், பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், மருத்துவமனைக்கு நேரில் சென்று மாணவர்களிடம் நலம் விசாரித்த கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார், பள்ளி நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்துக் கடும் அதிருப்தி தெரிவித்தார். மதிய உணவுக்குப் பின் மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட உடனேயே அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், தாமதப்படுத்தியது ஏன் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மாணவர்களின் பாதுகாப்பில் மெத்தனமாகச் செயல்பட்டவர்கள் மீது உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.