பூதப்பாண்டி: மகா ஆரத்தி எடுக்க அறநிலையத்துறை அனுமதி மறுப்பு – சன்னியாசிகள் மற்றும் போலீசாருக்கு இடையே பரபரப்பு!
பூதப்பாண்டி: கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டியில் உள்ள புகழ்பெற்ற பூதலிங்கசுவாமி கோயில் தெப்பக்குளத்தில் மகா ஆரத்தி எடுக்க இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அனுமதி மறுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அகில பாரத சன்னியாசிகள் சங்கம் மற்றும் பக்தர்கள் சேவா சங்கம் சார்பில், கங்கா தேவியைப் போற்றும் விதமாகத் தெப்பக்குளத்தில் ‘மகா ஆரத்தி’ நிகழ்ச்சிக்குத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இதற்கு அதிகாரிகள் தரப்பில் முன்கூட்டியே அனுமதி வழங்கப்படாததால், நிகழ்ச்சிக்கு வந்த சன்னியாசிகளைப் போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இதனால் அங்கு கூடிருந்த சன்னியாசிகளுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், தெப்பக்குளத்தில் ஆரத்தி எடுக்க முடியாத சூழலில், குளத்தில் இருந்து புனித நீரை எடுத்து வந்து கோயில் வளாகத்தில் உள்ள கலையரங்கில் வைத்து சன்னியாசிகள் மகா ஆரத்தியை மேற்கொண்டனர். இந்த நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி, ஏராளமான சாதுக்கள் மற்றும் ஆன்மீகப் பெரியோர்கள் கலந்துகொண்டனர். புனிதமான வழிபாட்டு நிகழ்விற்கு அதிகாரிகள் முட்டுக்கட்டை போட்டதாகக் கூறி பக்தர்கள் மத்தியில் அதிருப்தி நிலவியது.