கன்யாகுமரி: அரசு நிலத்தில் மரங்கள் மற்றும் பாறைகள் கடத்தல் – நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் புகார்!
கன்யாகுமரி: கன்யாகுமரி மாவட்டம், உண்ணாமலைகடை பேரூராட்சிக்கு உட்பட்ட கல்லுவிளை பகுதியில் அரசுக்குச் சொந்தமான நிலத்திலிருந்து விலை உயர்ந்த மரங்கள் மற்றும் பாறைகள் சட்டவிரோதமாகக் கடத்தப்படுவது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்துப் புகார் அளித்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கல்லுவிளை பகுதியில் உள்ள சிற்றாறு பட்டிணங்கால் கிளை கால்வாய் அருகே, நீர்வள ஆதாரத்துறைக்குச் சொந்தமான நிலம் அமைந்துள்ளது. இந்த நிலத்தில் உள்ள பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள விலை உயர்ந்த மரங்கள் மர்ம நபர்களால் வெட்டி கடத்தப்பட்டு வருகின்றன. மேலும், அங்குள்ள பாறைகளை ஜெலட்டின் குச்சிகள் மூலம் வெடிவைத்துத் தகர்த்துச் சட்டவிரோதமாகக் கடத்தும் பணிகளும் இரவு நேரங்களில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த அத்துமீறல்கள் குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும், சில அரசியல் பிரமுகர்களின் தலையீடு காரணமாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பதாகவும், கடத்தல் கும்பலுக்கு அதிகாரிகள் உடந்தையாக இருப்பதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இயற்கை வளங்கள் மற்றும் அரசுச் சொத்துக்கள் சூறையாடப்படுவதைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.